மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் மார்ச் 4ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாகச் சட்டமன்றத்தில் ஆளும் பாஜக அரசானது தனது எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று ’இந்திய தேசிய மக்கள் தளம்’ தனது குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவைக் கடுமையாகச் சாடியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், “நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநிலத்தில் போதிய வேலைவாய்ப்புகளை மக்களுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்தல் மற்றும் பணியமர்த்துதலில் சார்பற்ற தன்மை, தகுதி அடிப்படையில் பணி மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டுள்ளோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரையில் தனியார் துறைகளில் மொத்தம் 2.03 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் மட்டும் சுமார் 1.24 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 2.27 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் 1.17 லட்சம் பேருக்கு முறையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களில் 37,134 பேர் அவர்களின் திறன்களைப் பொறுத்துப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon