மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

ரஜினியிடம் பணம் பறிக்க நினைக்கிறார்கள்!

ரஜினியிடம் பணம் பறிக்க நினைக்கிறார்கள்!

ரஜினியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடுதான் கபாலி படத்தால் நஷ்டம் என்று செல்வகுமார் பொய்க் குற்றச்சாட்டைக் கூறுவதாகத் தயாரிப்பாளர் எஸ்.தாணு விளக்கம் அளித்துள்ளார்.

கபாலி படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தரைக்கூடக் காப்பாற்ற முடியாத ரஜினி எப்படி மக்களைக் காப்பாற்றுவார் என்று சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதற்குக் காரணம் தான்தானென்றும் இதற்கான தன்னிலை விளக்கம் அளிக்கப்போவதாகவும் செல்வகுமார் கூறியிருந்தார். அதன்படி (மார்ச் 2) சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விநியோகஸ்தர் செல்வக்குமார், “கபாலி படத்தைத் தென்னாற்காடு மற்றும் புதுச்சேரியில் திரையிடத் தயாரிப்பாளர் தாணுவிடம் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து உரிமையைப் பெற்றேன். ஆனால் படம் வெளியாகி 2 கோடியே 77 லட்சம் ரூபாய் மட்டுமே விநியோகஸ்தரான எனக்குக் கிடைத்தது. இதனால் எனக்கு 2 கோடியே 72 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதைத் தயாரிப்பாளர் தாணுவிடம் எடுத்துக்கூறினேன். அதற்கு அவர், நஷ்டம் ஏற்பட்ட தொகையில் ஒன்றரை கோடி ரூபாயைத் திருப்பிக்கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் தாணு கூறி 20 மாதங்கள் ஆன நிலையிலும் பணம் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “எனக்குக் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருகிறார்கள். தாணு கூறியபடி பணம் தராவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். கபாலி படத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து ரஜினியை நேரில் சந்தித்து முறையிடவுள்ளேன்” என்றும் செல்வகுமார் கூறினார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 5) பத்திரிகையாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, "கபாலி படம் சென்னை நகரில் மட்டும் 13 கோடி வசூல் செய்தது. அதை நான் பலமுறை வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன். கபாலி படத்தால் நஷ்டம் என்ற குற்றச்சாட்டு ரஜினியைக் குறிவைத்து உருவாக்கப்பட்டது. அதனால் விரைவில் உண்மை வெளிவரும். எனக்கு லாபம் கொடுத்த படம் கபாலி, அதில் நஷ்டம் எப்படி வரும்? கபாலி படத்திற்கும் செல்வகுமாருக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. அவர் கபாலி படத்திற்கு விநியோகஸ்தரும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்

"இதற்கு முன்பு ரஜினி படத்தால் நஷ்டம் என்று கூறியவர்களுக்கு ரஜினி சார் பணத்தைத் திருப்பித் தந்துள்ளார். அதனால் அதே போல் கூறிப் பணம் பறிக்கலாம் என்று நினைக்கிறார்கள். என்னிடம் நஷ்டம் என்று கூறிக்கொண்டு வந்தால் கணக்குகளைக் காண்பித்துக் கேள்வி கேட்பேன் என்று தெரிந்துதான் என்னிடம் வராமல் ரஜினி சாரிடம் செல்கிறார். இது மிகவும் தவறான செயல்" என்று தாணு விளக்கம் அளித்துள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon