மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

முழுமதுவிலக்கு ஏன் கூடாது என்றேன்?

முழுமதுவிலக்கு ஏன் கூடாது என்றேன்?

மொத்தமாக மதுவிலக்கை அமல்படுத்தினோம் என்றால் குடிப்பவர்கள் அதைவிடக் கொடிய போதைகளுக்கு அடிமையாவார்கள் என்பதால்தான் முழு மதுவிலக்கு கூடாது எனக் கூறினேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கடந்த மாதம் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளில் தீவிரம் காட்டிவருகிறார். கட்சி தொடங்கிய பிறகு முதல் பொதுக் கூட்டமாகச் சென்னையில் வரும் எட்டாம் தேதி மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் கமல்ஹாசன் இன்று (மார்ச் 5) சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் உரையாடல் நிகழ்த்தினார். அங்கு பேசிய கமல்ஹாசன், "இதற்கு முன்பு பத்திரிகை வாயிலாகவும் ட்விட்டர் வாயிலாகவும் பேசிக்கொண்டிருந்தேன். இன்று உங்கள் வாயிலாக நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள்தான் என்னுடைய பேச்சு. தமிழினம்தான் என்னுடைய மூச்சு" என்றார்.

நாங்கள் உங்களிடமிருந்து ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிற மாதிரி, நீங்கள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு மாணவி எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், "நீங்கள் என்னவெல்லாம் என்னிடத்திலிருந்து எதிர்பார்க்கிறீர்களோ, அவை அத்தனையையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நான் எதைச் செய்வேன் என்று நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்களோ, அதையெல்லாம் நீங்களும் செய்வீர்கள் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன்" என்று பதிலளித்தார். மேலும் விவசாயம் என்பது ஏதோ ஏழைகள் செய்வது என்று மட்டும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். படித்தவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அரசு செய்ய வேண்டிய வேலையைத் தனியாரிடத்திலும், தனியார் செய்யக்கூடிய வேலையை (டாஸ்மாக்) அரசிடமும் அதுவும் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தும் செய்வது கேவலமான ஒன்று. கல்வியைத் தனியார் கையில் கொடுத்துவிட்டனர்” என்றும் குற்றம் சாட்டினார் கமல்ஹாசன்.

"டாஸ்மாக் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தமிழகத்தை தள்ளிவிட்டுள்ளனர். முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று நான் கூறியதற்கான காரணம் மதுவைக் குடித்துவிட்டு பாழாய் போய்விட வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்களைக் குடிக்கக் கூடாது என்று தடுத்து மொத்தமாக மதுவிலக்கை அமல்படுத்தினோம் என்றால் அதைவிடக் கொடிய போதைகளுக்கு அவர்கள் அடிமையாகிவிடுவார்கள். கள்ளச் சாராயம் பெருகும். இது கூடாது. இதனையெல்லாம் மாற்ற வேண்டும்” என்று தெரிவித்த கமல், "கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். ஏழை கனவுகூடக் காண முடியாத அளவுக்கு அதன் விலையை ஏற்றக் கூடாது. மந்திரிகளின் பிள்ளைகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றினால் தன்னால் பள்ளிகள் மாறும் என்று கூறுகிறார்கள். செய்து பார்ப்போம்" என்றும் பேசினார். புதிதாய் இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கினார்.

ஆனந்த விகடனில் எழுதிவரும் தொடரில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon