ஏர்செல் சேவை பாதிப்பு தொடர்பாக அந்நிறுவனமும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்த 10 ஆண்டுகளாக ஏர்செல் ப்ரீபெய்டு இணைப்பைப் பயன்படுத்திவருகிறேன். என்னைப் போல் தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் மக்கள் ஏர்செல் தொலைத்தொடர்பு இணைப்பைப் பயன்படுத்திவருகின்றனர்.
இதற்காக 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 ஆயிரத்து 500 டவர்கள் சிறப்பாகச் செயல்படுவதாக ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைமை அதிகாரி சங்கர நாராயணன் ஜனவரி 22ஆம் தேதி பேட்டியளித்தார். திடீரென்று பிப்ரவரி 22ஆம் தேதி முதல் ஏர்செல் இணைப்பில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
ஏர்செல் இணைப்பைப் பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏர்செல் முழுமையாகச் செயல்படாமல் உள்ளது. 90% வாடிக்கையாளர்களால் இந்த இணைப்பைப் பயன்படுத்த முடியவில்லை.
எனவே வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்லுலார் நிறுவனங்களுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் இடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
ஆனால் ஏர்செல் நிறுவனத்தின் இந்தத் திடீர் முடிவால் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல் நிறுவனத்திலிருந்து வேறு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மாற பிப்ரவரி 21ஆம் தேதி ஒரே நாளில் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
செல்லுலார் இணைப்பு என்பது தற்போது அனைவருக்கும் அடிப்படைத் தேவையாக உள்ளது. இந்த இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் முறையாகச் சோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவருவது சட்டவிரோதமாகும்.
ஏர்செல் வாடிக்கையாளர்களின் எண்களோடு ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திடீர் இணைப்பு பாதிப்பால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் ட்ராய் தலையிட்டு ஏர்செல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஏர்செல் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.