மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

தென்னாப்பிரிக்க அணியின் மோசமான சாதனை!

தென்னாப்பிரிக்க அணியின் மோசமான சாதனை!வெற்றிநடை போடும் தமிழகம்

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. மார்ச் 1 அன்று டர்பனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து, முதல் இன்னிங்ஸில் 351 ரன்களைச் சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி எளிதில் இந்த ஸ்கோரை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 227 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது.

417 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஏய்டன் மார்க்ராம், குவின்டன் டி காக்கின் சிறப்பான ஆட்டத்தால் நல்ல ஸ்கோரை எட்டியது. மார்க்ராம்143 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி களத்தில் இருக்கும்வரை தென்னாப்பிரிக்கா வெற்றிபெறக்கூடிய நிலையில் இருந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த ஜோடி பிரிந்ததும் விக்கெட்கள் மள மளவென்று விழத் தொடங்கின. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்களைச் சேர்த்திருந்தது. 81 ரன்களுடன் குவின்டன் டி காக்கும், ரன் ஏதும் சேர்க்காமல் மோர்னி மோர்க்கலும் களத்தில் இருந்தனர்.

இன்று (மார்ச் 5) தொடங்கிய ஐந்தாம் நாள் போட்டியில் சிறிது நேரத்திற்குள்ளாகவே குவின்டன் டி காக் 83 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது டர்பன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி பெற்ற 3ஆவது வெற்றி.

டர்பன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்து மோசமான சாதனையைப் படைத்துள்ளது. இருப்பினும் மார்க்ராம்143 ரன்கள் சேர்த்ததன் மூலம், நான்காவது இன்னிங்ஸில் இலக்கைத் துரத்தித் தோல்வியடைந்த அணியில் அதிக ரன்களைச் சேர்த்த தொடக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உள்ளூரில் விளையாடிய கடைசி 3 தொடர்களில் தோல்வியைத் தழுவியுள்ளது அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரிலாவது தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon