மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்குகள்!

ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்குகள்!

வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நிறைவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரையில் 80 சதவிகித வங்கிக் கணக்குகளும் 60 சதவிகித மொபைல் எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

கணக்கில்லா சொத்துகளைக் களையெடுக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு வங்கிக் கணக்கு, வருமான வரி நிரந்தரக் கணக்கு மற்றும் மொபைல் எண்களை ஆதாருடன் இணைப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆதாருடன் இந்த விவரங்களை இணைப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டில் மொத்தமுள்ள 109.9 கோடி வங்கிக் கணக்குகளில், சுமார் 87 கோடிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதில், 58 கோடி வங்கிக் கணக்குகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், செயல்பாட்டிலிருக்கும் 142.9 கோடி மொபைல் எண்களில் சுமார் 85.7 கோடி மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணைய அதிகாரி ஒருவர் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத இறுதிக்குள் வருமான வரி நிரந்தர எண், வங்கி எண், கிரெடிட் கார்டு, காப்பீடு, பரஸ்பர நிதி, ஓய்வூதியம் மற்றும் சமூக நலத்திட்டப் பலன்கள் போன்றவையும் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ’மெய்நிகர் அடையாளம்’ என்னும் புதிய திட்டத்தின் மூலம் 16 இலக்க எண்ணை நேரடியாகப் பகிர்வதற்குப் பதிலான எளிய நடைமுறை ஒன்று விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. அதோடு பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக விரல் அடையாளங்களுடன் முக அடையாளம் பயன்படுத்தும் நடைமுறையும் செயல்படுத்தப்படும் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon