மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

வட கிழக்குத் தேர்தல் தோல்வி: ராகுல் கருத்து!

வட கிழக்குத் தேர்தல் தோல்வி: ராகுல் கருத்து!

வட கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று வட கிழக்கு மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவு கடந்த 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மற்ற இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

இந்த மூன்று மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் தனது ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. அதேபோல், நாகாலாந்தில் கடந்த 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 24.9 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வெறும் 2.1 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த மோசமான தோல்வி தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இன்று (மார்ச் 5) கருத்து தெரிவித்துள்ளார்.

“திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்துவரும் தொண்டர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில்,

ராகுல் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி தனது 3ஆவது கட்டப் பிரச்சாரத்தை ராகுல் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon