மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

மதுரை ஆதினத்துக்குள் நுழைய நித்திக்குத் தடை!

மதுரை ஆதினத்துக்குள் நுழைய நித்திக்குத் தடை!வெற்றிநடை போடும் தமிழகம்

293ஆவது ஆதீனம் என்று நித்யானந்தா அறிவித்துக்கொண்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது இளைய மடாதிபதியாக நித்யானந்தா தன்னைத் தானே நியமித்துக்கொண்டதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெகதலப்பிரதாபன் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “பாலியல் வழக்கில் சிறைக்குச் சென்றுவந்த நித்யானந்தா மதுரை ஆதீன மடம் உள்பட பல்வேறு சைவ மடங்களைச் சட்ட விரோதமாகக் கைப்பற்ற முயற்சிகளைச் செய்துவருகிறார். எனவே ஆதீன மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இவ்வழக்கு தொடர்பான கடந்த விசாரணையின்போது, நித்யானந்தா தானாக வரவில்லை, அவரை நியமித்ததே தற்போதைய ஆதீனம்தான் என்று நீதிபதி தெரிவித்தார். அதற்கு ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நித்யானந்தா நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

நித்யானந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரகுநாதன், “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல, பொதுநல மனுவாகவோ, சிவில் வழக்காகவோதான் தாக்கல் செய்திருக்க வேண்டும். மடத்தில் முறையாகப் பூஜைகள் நடைபெறுவதில்லை, எனவே பூஜைகள் நடத்த மடத்துக்குள் அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

பூஜைகள் செய்ய ஓதுவார்களை நியமிக்கலாம் எனக் கூறி மடத்துக்குள் நுழைய நித்யானதாவுக்கு இடைக்காலத் தடை விதித்தார் நீதிபதி.

வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை 5ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி மகாதேவன், 2ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கிற்கு இன்று (மார்ச் 5) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. நித்யானந்தா மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையவும், மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களில் நுழையவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. அதையும் மீறி அவர் நுழைந்தால் காவல் துறை உதவியிடன் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் மடாதிபதிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து 292ஆவது ஆதீனம் அருணகிரிநாதர், “ஆதீனத்தின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் மடத்தை விட்டு வெளியேறித்தான் ஆகவேண்டும். இப்போதைக்கு ஆதீன மடத்திற்குப் புதிய வாரிசு நியமனம் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. காலம் வரும்போது புதிய ஆதீனத்தைத் தேர்ந்தெடுத்துப் பட்டம் கட்டுவோம்” என்று கூறியுள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon