மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

காவிரி: 9ஆம் தேதி மத்திய அரசின் கூட்டம்!

காவிரி: 9ஆம் தேதி மத்திய அரசின் கூட்டம்!

காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட காவிரியால் பாசனம் பெறும் மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

காவிரி வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில் அடுத்த ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாகத் தமிழகத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதுவரை பிரதமரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. கடந்த 3ஆம் தேதி முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு பேசிய மு.க.ஸ்டாலின், "பிரதமர் சந்திக்க மறுப்பதாகவும், நீர்வளத் துறை அமைச்சரை சந்தியுங்கள் என்று தகவல் வந்துள்ளதாகவும் முதல்வர் என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.

ஆனால் தமிழகம் வந்த மத்திய நீர்வளத் துறை நிதின்கட்கரி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தான் எவ்வித உத்தரவாதமும் கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படாததாலும், நிதின் கட்கரியின் பேச்சாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்ற சந்தேகமும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்தது. இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாளை மறுநாள் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வரும் 9ஆம் தேதி ஆலோசனை நடத்த தமிழகம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்புக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்ச்ர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை இன்று (மார்ச் 5) மாலை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

“மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த தகவலின்படி, வரும் 9-ம் தேதி பகல் 12 மணிக்கு டெல்லியில் காவிரியால் பயன்பெறும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், துறைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டம் கூட்டப்படுகிறது என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளரும், பொதுப்பணித் துறைச் செயலாளரும் கலந்துகொள்வார்கள்.

காவிரி நீரில் தமிழகத்துக்குள்ள உரிமையைத் தமிழகம் என்றைக்கும் விட்டுக் கொடுக்காது. நாடாளுமன்றத்தை இன்று ஸ்தம்பிக்கவைத்தோம். தொடர்ந்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளின் உணர்வுக்கேற்ப இந்த விவகாரத்தில் அரசு போராடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி, "காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9ஆம் தேதி ஆலோசனை நடத்த வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தில் பங்கேற்போம். கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் நாளை ஆர்ப்பட்டமும் நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon