மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

நிர்பயா நிதி : மத்திய அரசு அனுமதி!

நிர்பயா நிதி :  மத்திய அரசு அனுமதி!

பெண்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை அளிக்கும் 8 நகரங்களை உருவாக்க நிர்பயா நிதியத்தின் கீழ் ரூ.2,919 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கும்பலால் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லியிலும் பின்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதியம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2013 முதல் 2017 வரையிலான காலத்தில் நிர்பயா நிதியத்துக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு நிர்பயா நிதியம் மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ரூ.2,919 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை செயலாளர் தலைமையிலான நிர்வாக குழு அனுமதி வழங்கியது. இதன் மூலம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய 8 நகரங்கள் பயன் அடையும்.

டெல்லியில் ரூ.664 கோடியில் வீடியோ கண்காணிப்பு, குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மும்பையில் ரூ.252 கோடியில் வீடியோ கண்காணிப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதேபோல கொல்கத்தாவில் ரூ.181.32 கோடியில் மகளிர் போலீஸ் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. பெங்களூருவில் ரூ.667 கோடியில் மகளிர் போலீஸ் புறநகர் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதேபோல சென்னை, ஹைதராபாத், லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon