மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

பேனர்கள் அகற்றம்!

பேனர்கள் அகற்றம்!வெற்றிநடை போடும் தமிழகம்

சென்னையில் அனுமதியின்றியும் சட்ட விரோதமாகவும் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகச் சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி விதிகளை மீறிச் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

அந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, “பிப்ரவரி 24ஆம் தேதியன்று நான் விமான நிலையம் செல்லும்போது அந்த வழியில் நானே பார்த்தேன், விதிகளை மீறிப் பொதுமக்களுக்கு இடையூறாகப் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிமன்றக் குடியிருப்பிலிருந்து நீதிமன்றம் வரும்வரை எந்த பேனரும் இல்லை; ஆனால் சென்னை முழுவதும் அனுமதியின்றி விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், பேனர்களை அகற்றக் கால அவகாசம் கேட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சியும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், அனைத்து பேனர்களையும் அகற்றி வரும் மார்ச் 5ஆம் தேதி திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்வதாகக் கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (மார்ச் 5) மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது சென்னை நகரில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன என்றார். இது தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தனர்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon