ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை தனக்கு அனுப்பியுள்ள சம்மன்களை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (மார்ச் 6) விசாரணைக்கு வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி அன்னிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தருவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு மார்ச் 6ஆம் தேதி வரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். நேற்று டெல்லியில் இருந்து மும்பைக்கு கார்த்தியை அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள், பைக்குலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “விசாரணை அமைப்புகளுக்குத் தான் நன்கு ஒத்துழைப்பதாகவும், அதேவேளையில், ஐஎன்எக்ஸ் முதலீட்டுக்கு சம்பந்தமே இல்லாத விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் குறிப்பிடப்படாத விஷயங்களில் என்னைச் சிக்கவைக்க அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ முயற்சி செய்துவருகிறது என்றும் கூறியுள்ள அவர், தனக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது. கார்த்தியின் சிபிஐ காவலும் நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக மும்பை பைக்குலா சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி காணொளிக்காட்சி மூலம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவருக்கான நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.