மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

திருப்பதி : ஒரே நாளில் 2000 திருமணங்கள்!

திருப்பதி : ஒரே நாளில் 2000 திருமணங்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (மார்ச் 4) ஒரே நாளில் 2000 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்கவும் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காகவும், பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நகை, பணம் உள்ளிட்டவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துவது வழக்கம். சிலர் திருப்பதியில் திருமணம் செய்துகொள்வதைப் பாக்கியமாக நினைக்கின்றனர். வேண்டுதல் காரணமாகவும், விருப்பத்தின் பேரிலும் இங்கு வந்து திருமணம் செய்துகொள்கின்றனர். இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களும் திருப்பதிக்கு வந்து திருமணம் செய்துகொள்கின்றனர். எனவே, திருமணம் செய்துகொள்வதற்கான ‘கல்யாண வேதிகை’ என்னும் ஏற்பாட்டினை தேவஸ்தானம் செய்துள்ளது.

திருப்பதியில் திருமணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் 2016ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்டது. அதன்படி, திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் www.ttdsevaonline.com என்ற தேவஸ்தான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதுதவிர திருப்பதியில் உள்ள பல தனியார் மடங்களிலும் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. சுபமுகூர்த்த நாளான நேற்று சுமார் 2,000 ஜோடிகளுக்குத் திருமணங்கள் நடத்தப்பட்டது.

2014ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி திருப்பதியில் 5,000 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தப்பட்டது. மண்டபம், சத்திரம் கிடைக்காததால் வீதி மற்றும் திறந்த இடங்களில் புரோகிதர் மூலம் மந்திரங்கள் கூறி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon