மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

தொடங்கியது கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாடு!

தொடங்கியது கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாடு!வெற்றிநடை போடும் தமிழகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இன்று தொடங்கியது.

முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். முதல் நாள் மாநாட்டில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்பர். 2ஆம் நாள் ஐஏஎஸ் அதிகாரிகளும் 3ஆம் நாள் ஐபிஎஸ் அதிகாரிகளும் பங்குகொள்வார்கள்.

இதில், தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் எடுத்துக்கூறுவார்கள். அதேபோல், ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து தங்களின் விளக்கங்களைத் தெரிவிப்பார்கள். முதல்வரும் அறிவுரைகள் வழங்குவார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு கடைசியாக 2013ஆம் ஆண்டு டிசம்பர் 11, 12, 13ஆம் தேதிகளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மார்ச் 5, 6, 7 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெறும் எனத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த மாநாடு இன்று(மார்ச் 5) தொடங்கியது.

மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர், “ சட்டம் ஒழுங்கை திறமையாகப் பராமரித்தல், பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வெளிப்படையாகவும் திறமையாகவும் அளித்தல், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், புதிய உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக உருவாக்குதல் ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளாகிய நீங்கள், உங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் பாலமாகவும், மக்கள் சேவகர்களாகவும் செயல்பட வேண்டும்.

பயங்கரவாதம், மதவாதம், இடதுசாரி தீவிரவாதம் ஆகியவை சமுதாயத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்கள். இவற்றை எதிர்கொள்ள நமது புலனாய்வு அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon