மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு: அவகாசம் கேட்கும் சட்டமன்ற செயலாளர்!

ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு: அவகாசம் கேட்கும் சட்டமன்ற செயலாளர்!

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வமான இறுதி வாதத்தைத் தாக்கல் செய்வதற்கு இன்று (மார்ச் 5 ) வரை அவகாசம் அளித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஒரே ஒரு தரப்பு மட்டும் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யாததால் மார்ச் 7-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நடந்த நம்பிக்கைவாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பன்னீர் தரப்பின் இறுதிகட்ட வாதம் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், இன்று சக்கரபாணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் தனது இறுதிகட்ட பதில் வாதத்தை முன் வைத்தார். இந்த வழக்கில் இன்னொரு மனுதாரராக சேர்ந்துகொண்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதாடினார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில்... இந்த வழக்கில் எழுத்துபூர்வ வாதங்களை மார்ச் 5 -ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர், வழக்கை அந்தத் தேதிக்கே ஒத்தி வைத்தனர்.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்குத் தொடர்ந்த திமுக கொறடா சக்கரபாணி தரப்பு, இடையில் தன்னை இணைத்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தரப்பு, எதிர்மனு தாரர்களான ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பு ஆகியோர் தங்கள் எழுத்துபூர்வ இறுதிவாதங்களை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து விசாரணை நிறைவுறும் வரை சபாநாயகர் தரப்பு நோட்டீஸை ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் சட்டமன்ற செயலாளர் தரப்பில் வழக்கறிஞர் மட்டும், ‘எழுத்துபூர்வ இறுதிக்கட்ட வாதத்தை தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்று இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து மார்ச் 7-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர் நீதிபதிகள். மார்ச் 7-ம் தேதி சட்டமன்ற செயலாளர் எழுத்துபூர்வ இறுதித் தரப்பை தாக்கல் செய்த பின் அவை நீதிபதிகளால் ஆராயப்பட்டு பின் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon