மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

வரலட்சுமி ஆடிய பாம்பு நடனம்!

வரலட்சுமி ஆடிய பாம்பு நடனம்!வெற்றிநடை போடும் தமிழகம்

நீயா 2 படத்திற்காக அடர்ந்த காட்டின் நடுவே பாம்பு நடனம் ஆடியுள்ளார் வரலட்சுமி.

கதாநாயகியாக மட்டுமல்லாமல் சிறந்த கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்துவரும் வரலட்சுமி நீயா 2 படத்தில் பாம்பாக மாறும் பெண்ணாக நடித்துள்ளார். எல்.சுரேஷ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. வரலட்சுமி பங்கேற்ற பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு அனுபவம் குறித்து வரலட்சுமி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். “தலக்கோனாவிலுள்ள அடர்ந்த காட்டின் நடுவே படப்பிடிப்பு நடைபெற்றது. அடிவாரத்திலிருந்து 45 நிமிடங்கள் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்தை அடைவோம். மலையும் காடும் அழகாக இருந்தன. கலா மாஸ்டர் நடன இயக்குநராகப் பணியாற்றினார். இந்தப் பாடலுக்குள்ளேயே ஒரு கதை இருக்கும்” என்று கூறியுள்ளார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருபத்திரண்டு அடி பாம்பு ஒன்று இடம்பெறுகிறது. கிராபிக்ஸில் உருவாகும் அந்தப் பாம்பு எத்தகைய வடிவில், குணாதிசயத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக இயக்குநர் சுரேஷ் கள ஆய்வில் ஈடுபட்டார். அது குறித்து சுரேஷ், “ராஜநாகம் படத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பல்வேறு இடங்களில் அவை பற்றிய தகவல்களைத் தேடினோம். இறுதியாக பாங்காக் அருகில் ராஜநாகம் இருப்பதை அறிந்து சென்றோம். விமானத்திலும் அதன் பின் காரிலும் அந்த இடத்தை அடைந்தோம். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அவற்றைப் படம்பிடித்துக்கொண்டோம். அங்குள்ளவர்களிடம் பாம்பின் தன்மை, குணங்கள் குறித்து கேட்டறிந்தோம். இது கிராபிக்ஸில் அதைப் படைப்பதற்கு உறுதுணையாக இருக்கும். வழக்கமாக பாம்புகள் பழிவாங்குவதே பெரும்பாலான படங்களில் இடம்பெறும். ஆனால் இந்தப் படத்தில் அழகான காதல் கதையைச் சொல்கிறோம்” என்று கூறியுள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon