சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
126 ஆண்டு பழமை வாய்ந்த, சென்னை பாரிமுனையில் இயங்கிவரும் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மாணவர்களிடையே ஏற்பட்ட வன்முறையை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இக்கல்லூரியின் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளங்கலை சட்டப் படிப்பு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சென்னைக்கு வெளியே காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூரிலும் அமைக்க இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்று ரூ.118 கோடி மதிப்பீட்டில் மேல் குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2015ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. கல்லூரி இடமாற்றம் செய்யப்படாது என்று உறுதியளித்ததையடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் 6 மாணவர்கள் 2 மாடிக் கட்டடத்தின் உச்சிக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இவ்வாறு, தற்கொலை மிரட்டல் விடுப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்தூல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.
இதில் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும் என்று கேட்ட தலைமை நீதிபதி, இது நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு; மாணவர்கள் போராட்டம் தொடர்பாகக் கவனிக்கப்படும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.