மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

உங்கள் மனசு: கற்றலில் குறைபாடா? -2

உங்கள் மனசு: கற்றலில் குறைபாடா? -2

சிறு வயதிலிருந்தே தொடர் தோல்விகள் மற்றும் விமர்சனங்களைக் கடந்து வருகிறார்கள் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள். இதுவே, அவர்களுக்குள் உளவியல் ரீதியாகப் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதனால், இந்தக் குழந்தைகள் கல்வி அமைப்போடு போராடும் சூழல் உருவாகிறது. இது, இந்த கல்வி அமைப்பின் தோல்வியா அல்லது குழந்தைகளின் குறைபாடா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

”இன்னும் நன்றாகப் படித்து கடினமாக உழைக்க வேண்டும்” என்றே இந்தக் குழந்தைகளிடம் அவர்களது பெற்றோர்கள் கூறுவார்கள். இது அடிக்கடி நடக்கும்போது, வெறும் அறிவுரையாக அல்லாமல் வசவாகவும் மாறும். பாசிட்டிவான கருத்துகளைக் கேட்பதை விட, நெகட்டிவ்வான விமர்சனங்களையே இவர்கள் அதிகம் கேட்டு வளர்வார்கள். பிற்காலத்தில் இவர்கள் விரக்தியிலும் வெட்கத்திலும் தான் வாழ்வார்கள். இது, இவர்களது ஆளுமையை முழுவதுமாகச் சிதைத்துவிடும்.

தங்களைப் பற்றிய சுயமதிப்பீடும் தன்னம்பிக்கையும் குறைவாக இருக்கும். அதன்பின், கற்றல் குறைபாடுடைய குழந்தைகளின் மனதில் படிப்பு எப்படி ஏறும்?

’இது எனக்கு வராது; நான் ஒரு முட்டாள்’ என்று ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு நினைக்கும் பட்சத்தில், அந்த மாணவரால் தொடர்ந்து படிக்க முடியுமா? ஆனால் இதுதான் நிகழ்கிறது. அப்போதுதான், அவர்கள் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கத் தொடங்குகின்றனர்.

என்னுடைய முயற்சிக்கும் அதனால் உண்டாகும் பின்விளைவுக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கத் தொடங்கும்போது, ஒருவரின் ஆளுமை சிதைவடையும். நான் ஏன் இனி முயற்சி செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். இதனால், அவர்கள் வாழ்க்கை திசைமாறும்போதுதான் பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். இப்போது பெற்றோர்களாக இருப்பவர்கள், சிறுவயதில் கற்றலில் குறைபாட்டைச் சந்தித்திருப்பார்களா? இந்தக் கேள்விக்குப் பதிலறிய, வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியம்.

தொழிற்புரட்சியின் விளைவாக, நகரங்களில் தொழிற்சாலைகள் பெருகின. இதனால், நகரங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வது அதிகமானது. பல ஊர்களிலிருந்தும் வந்த, பல்வேறு வேற்றுமைகள் கொண்ட மக்கள் ஒன்றாக வாழத் தொடங்கினர். இவர்கள் அனைவருக்கும் ஒன்றாகப் பாடம் நடத்த வேண்டிய அவசியம் உண்டானபோது பெரும் சிக்கல் எழுந்தது. ஒருவருக்குப் புரிந்தது, இன்னொருவருக்குப் புரியவில்லை.

கடற்கரையில் பிறந்த மாணவருக்கு மீன் பற்றி விளக்கலாம்; நீலகிரி மலையில் பிறந்தவருக்கு, அது எப்படி எளிதாகப் புரியும்? இதனால், மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகப் படிக்க முடியாத நிலை உண்டானது.

தொழிற்புரட்சியின் மறைமுக தாக்கத்தினால், அதற்கு ஏற்றவாறு ஆட்களை உருவாக்கும் கல்விமுறை பரவலானது. கல்வி வியாபாரமானதால், குழந்தைகளின் புரிதல் பற்றிய எந்த அக்கறையுமில்லை. குழந்தைகளுக்கு எது வரும், வராது என்று யாரும் யோசிக்கவில்லை. எது குழந்தைகளுக்கு வேண்டும்? வேண்டாம் என்று கூட விவாதிக்கவில்லை. பன்னாட்டு முதலாளிகளுக்குத் தேவையான வேலையாட்களைத்தான் இந்த கல்வித்திட்டம் உருவாக்கி வந்தது, இப்போதும் அந்த நிலை தொடர்கிறது.

இதுவே, கற்றலில் குறைபாடு என்பதே சமூகத்தினால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நோய் என்று சிலரைச் சிந்திக்க வைத்திருக்கிறது. காரணம், இந்த கல்விமுறை தான் ஒருவரது தகுதியையும் தகுதியின்மையையும் தீர்மானிக்கிறது. படிப்பு, தொழில் சார்ந்த விஷயமாகவே இப்போதும் பார்க்கப்படுகிறது.

ஒரு வேலையை முழுமையாக்க புரொபொஷனல், எக்சிகியூட்டிவ், ஸ்கில்டு, செமி ஸ்கில்டு என அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். இதற்கேற்றவாறே, நமது கல்விமுறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பூர்த்தி செய்பவர்களுக்கு அதிக சம்பளமும் நல்ல சமூகத் தகுதியும் கிடைக்கும். இல்லாதவர்களுக்கு, இரண்டுமே குறைவுதான். இதில் பெரிதாகத் திறமையை வெளிப்படுத்த முடியாதவர்கள் ஒதுக்கி வைக்கப்படும் நிலையும் தொடர்கிறது.

எந்தப் படிப்புக்கு முக்கியத்துவம் அதிகம் என்று நிர்ணயிப்பதை ஒரு சிலரே முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்கேற்றவாறு படிக்கும் கடமை குழந்தைகளைச் சென்றடைகிறது. தனது விருப்பத்தைப் புறந்தள்ளிவிட்டு, எது படித்தால் வேலை கிடைக்கும் என்று பயணிக்கும்போது அவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.

சிரமங்களைக் கூட விட்டுவிடலாம். இந்தக் கல்விமுறை முழுதாகப் புரியாத நிலையை குழந்தைகள் எதிர்கொள்ளும்போது, அவர்களுக்கு மூளை வளர்ச்சியே குறைவு என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் சில பெற்றோர்கள். கிட்டத்தட்ட, இதே ரக நெருக்கடியைத்தான் அஜய் படித்த பள்ளி அவனுக்கு அளித்திருந்தது.

மனநல மருத்துவரிடம் கடிதம் வாங்கி வந்தபிறகு ஒரு மாணவன் படிப்பைத் தொடரலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் அளவுக்கு, இந்த கல்வி அமைப்பும் சமூகமும் சிதைந்துபோயுள்ளது. மூளையில் கோளாறு என்று மருந்துகள் அளிப்பதையோ அல்லது சிறப்புப் பள்ளியில் சேர்ப்பதையோ, இது போன்ற முடிவுகள் ஊக்குவிக்கிறது. கற்றல் குறைபாட்டினால் பல குழந்தைகளின் வாழ்கை சிதைக்கப்படுவது தொடர்கதையாகிறது.

நாங்கள், அஜய்க்கு மருந்து மாத்திரைகள் ஏதும் கொடுக்கவில்லை. முதலில், அவரது பெற்றோரை அழைத்துப் பேசினோம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்திறமைகள் உண்டு என்பதைப் புரியவைத்தோம். பாடுவதையும், பேசுவதையும், ஆடுவதையும் திறமைகளாகக் கொண்டவர்களுக்கு ஒரே மாதிரி பாடம் நடத்துவதும், அதை வைத்துக்கொண்டு தேர்வு எழுதுவதும் சரியாக இருக்குமா? இந்த முறையில் ஒருவரை முட்டாள் என முத்திரை குத்துவது சரியாகுமா? இதனை அஜய்யின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தினோம்.

எழுதுவது என்பது ஒரு திறமை. அது இல்லையெனில், அதனை முன்னேற்றும் பயிற்சிகள் தேவை. ஆனால், நமது பள்ளிகள் ஒருவரது தனித்திறமையை முன்னேற்றுவதற்கான பயிற்சிகளை அளிக்கத் தயாராக இல்லை. திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை பள்ளிகள் கொடுத்துவிட்டால், அங்கேயே அந்தப் பிரச்சனை முற்றுப்பெற்றுவிடும். அவ்வாறு செய்யாத காரணத்தினால், ஒரு சிறப்புப் பயிற்சியாளர் அதனைத் தர வேண்டியதாயிருக்கிறது. தற்காலத்தில், பல பள்ளிகள் சிறப்புப் பயிற்சியாளரும் இருக்கிறார்கள் என்றே விளம்பரம் செய்கின்றன. அது கூடுதல் பயிற்சியல்ல; சில குழந்தைகளுக்கு அத்தியாவசியமானது என்பதை யார் எடுத்துச் சொல்வது?

தங்களது குழந்தைகள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதையும், ஆங்கிலம் பேசுவதையும், அதிகமாகச் சம்பாதிப்பதையும் சாதாரணமான மனிதர்கள் விரும்புகிறார்கள். உடல் உழைப்பு இல்லாமல் தங்களது குழந்தைகள் வேலை செய்ய வேண்டுமென்பதே, இவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பம். இருக்கிறது. இந்த மாயையிலிருந்து பெற்றோர்களை வெளியே கொண்டுவர வேண்டும். அஜய் விஷயத்தில் இது மிகச்சரியாக நடந்தது.

இப்போது, அஜய் ஒரு அரசுப்பள்ளியில் படித்து வருகிறான். இதற்கு முன்பு தமிழ், பிரெஞ்ச், ஹிந்தி என்று மூன்று மொழிகளைப் படித்து வந்தான். இது தவிர, வீட்டில் அவனுக்கு ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்தனர். அந்த நிலைமை இப்போது இல்லை. அவனது தனித்திறமைகளைக் கொண்டாட, அவனுக்கென்று ஒரு உலகம் கிடைத்திருக்கிறது.

படிப்பு வரவில்லையெனில் மக்கு என்று சொல்லும் நிலைமையை, சிலர் காசாக்கத் துடிக்கின்றனர். கற்றலில் குறைபாடும் அப்படித்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், சில பயிற்சிகளால் அந்தக் குறைபாட்டைச் சீராக்க முடியுமென்பதே உண்மை!

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு-1

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon