இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் மதிப்பு 2020ஆம் ஆண்டுக்குள் ரூ.2 லட்சம் கோடியை எட்டும் என்று ஆலோசனை நிறுவனமான இ.ஒய். இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை 2017ஆம் ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017ஆம் ஆண்டில் இத்துறை 13 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் இத்துறை மேலும் 11.6 சதவிகித வளர்ச்சி கண்டு ரூ.2 லட்சம் கோடியை எட்டும். டிஜிட்டல் துறையில்தான் அதிகபட்ச வளர்ச்சி இருக்கும். இந்தியாவில் வளர்ந்துவரும் துறைகளில் முக்கியமான ஒன்றாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை இருக்கிறது.
2017ஆம் ஆண்டு கணக்குப்படி, தொலைக்காட்சித் துறை இதில் முன்னிலை வகிக்கிறது. இதன் மதிப்பு 660 மில்லியன் ரூபாயாக உள்ளது. பத்திரிகை ஊடகத்தின் மதிப்பு ரூ.303 மில்லியனாகவும், திரைப்படத் துறையின் மதிப்பு ரூ.156 மில்லியனாகவும், டிஜிட்டல் துறையின் மதிப்பு ரூ.119 மில்லியனாகவும், அனிமேஷன் மற்றும் வி.எஃப்.எக்ஸ். துறையின் மதிப்பு ரூ.67 மில்லியனாகவும், ஆன்லைன் விளையாட்டுத் துறையின் மதிப்பு ரூ.30 மில்லியனாகவும், வானொலித் துறையின் மதிப்பு ரூ.26 மில்லியனாகவும், இசைத் துறையின் மதிப்பு ரூ.13 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் துறை அதிகபட்சமாக 29.35 சதவிகித வளர்ச்சியையும், பத்திரிகை ஊடகத்துறை 2.36 சதவிகிதத்துடன் குறைவான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.