மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

காவிரி விவகாரம்: ராஜிநாமா செய்யத் தயார்!

காவிரி விவகாரம்: ராஜிநாமா செய்யத் தயார்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ள மைத்ரேயன் எம்பி, ஆனால் அப்படிச் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி விவகாரத்தில், ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தான் எவ்வித உத்தரவாதமும் கொடுக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்பிக்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று மார்ச் 4 செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்பி மைத்ரேயன், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைந்துவிடும், அதற்கான நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்படும் என்றால் எங்கள் தலைமை ஆணையிட்டால் ராஜிநாமா செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், ராஜிநாமா செய்வதால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடுமா என்பது முக்கியம். நாடாளுமன்றத்துக்கு உள்ளே, மற்ற கட்சிகளுடன் பேசி அவர்களைச் சேர்த்துக்கொண்டு மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளிப்பதுதான் சரியாக இருக்கும். நிச்சயமாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமருக்கு நிர்பந்தம் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.

வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்தது போன்ற வெற்றி தமிழகத்திலும் கிடைக்கும் எனத் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, “ கடந்த 50 வருட வரலாறு அவருக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்.

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஆறு வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon