மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

திமுக-காங்கிரஸ் கூட்டணி: கனிமொழி தீவிரம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி: கனிமொழி தீவிரம்!வெற்றிநடை போடும் தமிழகம்

திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்துவிடக் கூடாது என்று தமிழக காங்கிரசில் சிலர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், எப்படியாவது இந்தக் கூட்டணி நிலைத்திருக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாகத்தான் நேற்று (மார்ச் 4) சென்னையில் நடந்த, திமுக மகளிரணியின் மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான ரேணுகா சௌத்ரியை அழைத்து வந்திருக்கிறார்.

இவ்விழாவில் கனிமொழி பேசுகையில், “இவ்விழாவை மார்ச் 8-ம் தேதியன்றுதான் கொண்டாடுவதாக இருந்தோம். அதற்காக ரேணுகா சௌத்ரி அவர்களிடம் நேரம் கேட்டபோது, 8-ம் தேதி தனது உறவினர் திருமணம் என்று சொன்னார். எனவே அதற்கு முன்பே விழாவை நடத்த திட்டமிட்டு தளபதியிடம் கேட்டேன். ‘ரேணுகா சௌத்ரிஎந்த தேதி சொல்கிறாரோ அப்போதே நடத்திக் கொள்ளலாம் என்று சொன்னார். நான் மீண்டும் ரேணுகா சௌத்ரியிடம் பேசி 4-ம் தேதி வரமுடியுமா என்று கேட்டேன்.

அப்போது ரேணுகா சௌத்ரி என்னிடம், ‘ஏன் நான் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்பதில் இவ்வளவு உறுதியாக இருக்கிறாய்?’என்று கேட்டார். நான் சொன்னேன் தமிழர்கள் ராவணனையும் விரும்புவார்கள், சூர்ப்பணகையையும் விரும்புவார்கள் என்று’’ என ரேணுகாவுக்கு திமுக அளிக்கும் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார் கனிமொழி.

கடந்த நாடாளுமன்றத் தொடரில் பிரதமர் பேசிக்கொண்டிருக்கும்போது ரேணுகா சௌத்ரி சத்தமாக சிரிக்க, ‘சூர்ப்பணகையின் சிரிப்பைக் கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அவர் சிரிக்கட்டும்’’ என்று பிரதமரே குறிப்பிட்டார். அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி ரேணுகாவை சூர்ப்பணகை என்று வர்ணித்தார் கனிமொழி.

மேலும், “இன்றைய ஆட்சி தமிழகத்தின் முன்னேற்றத்தை எல்லாம் நசித்து அழித்து வைத்திருக்கும் ஓர் ஆட்சி. இந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற மத்திய ஆட்சி அதைவிட மோசமாக இருக்கிறது. சிறுபான்மையினருக்கு உரிமைகள் இல்லை, பெண்களுக்கு மரியாதை இல்லை, இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற ஆட்சிதான் மத்தியில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால், தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் , அத்தனை பெண்களும் சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டும் , ‘அண்ணன் தளபதி அவர்களை முதலமைச்சராக ஆக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்றுவோம், மத்தியிலே இருக்கும் அரசாங்கத்தை அகற்றி இந்தியாவைக் காப்பாற்றுவோம்’’ என்று திமுக காங்கிரஸ் கூட்டணியை வலியுறுத்தி அமர்ந்தார்.

ரேணுகா சௌத்ரி பேசுகையில், ‘’தமிழகத்துக்கு விரைவில் மு.க.ஸ்டாலின் என்கிற சிறப்பான முதலமைச்சர் கிடைப்பார்’’ என்று அரங்கத்தை கைதட்ட வைத்தார்.

விழாவில் சிறப்புரையாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியபோது,

‘’இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவி திட்டம் என இவற்றையெல்லாம் நிறைவேற்றிய இயக்கம் திமுக.

ஐக்கிய நாடுகளின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் வருகிற நேரத்தில் எல்லாம் வருடாவருடம் ஒரு முழக்கத்தை வெளியிடுவார்கள். “TIME IS NOW - இதுதான் உகந்த நேரம்” என்பது தான் இந்தாண்டு முழக்கம். அதைத்தான் நானும் உங்களுக்கு அறைகூவலாக விடுக்க விரும்புகிறேன். நாளைய தினம் (இன்று) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது,

அதில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முன்வாருங்கள், அதுதான் உண்மையிலேயே மகளிருக்கு நீங்கள் செய்யக்கூடிய மரியாதையாக இருக்க முடியும். அப்படி நிறைவேற்றவில்லை எனச்சொன்னால் அதை நிறைவேற்றுவதற்கான எல்லா சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

ரேணுகா சௌத்ரி இந்த விழாவில் பங்கெடுத்ததன் மூலம் திமுக -காங்கிரஸ் உறவு மேலும் பலப்படும் என்கிறார்கள் திமுக மகளிரணி வட்டாரத்தில்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon