மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்த ஆஸ்கர்!

ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்த ஆஸ்கர்!

ஆஸ்கர் விழாவின்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள சினிமா கலைஞர்கள், விமர்சகர்கள், ஆர்வலர்கள், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த 90ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றுமுடிந்துள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களுக்காக அமெரிக்க அரசு வழங்கும் விழாவாக இருந்தாலும் பல்வேறு நாட்டுக் கலைஞர்களும் அதில் பணியாற்றிவருகின்றனர். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவில் மற்ற நாட்டுத் திரைப்படங்களும் போட்டியில் கலந்துகொள்கின்றன. அதோடு ஹாலிவுட்டுக்கான ரசிகர்கள், உலகம் முழுவதும் நிறைந்துள்ளனர்.

உலகளவில் சினிமாவுக்குப் பங்களிப்பு செய்து மறைந்துபோன பிரபலங்களை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் நிகழ்வின்போது வீடியோ ஒன்று திரையிடப்படும். இந்த முறை ஒளிபரப்பப்பட்ட வீடியோ மூலம் சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் நிகழ்வின்போது நினைவுகூரப்பட்டார்.

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற கோகோ (COCO) படத்தில் உள்ள ரிமெம்பர் மீ (Remember me) பாடலின் பின்னே மறைந்த கலைஞர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றன. ஜேம்ஸ் பாண்ட் வகைப் படங்களில் நடித்த ரோஜர் மூர், தி சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படத்தை இயக்கிய ஜோனாதன் டெம், இந்தியத் திரையுலகில் 300 படங்களுக்கும் மேல் நடித்துப் புகழ்பெற்ற ஸ்ரீதேவி, இந்திய நடிகர் ஷாஷி கபூர், அமெரிக்க-கனடிய இயக்குநர் ஜார்ஜ் ஆண்ட்ரூஸ் ரோமரோ, பாரீஸ் டெக்ஸாஸ் படத்தில் நடித்திருந்த ஹாரி டீன் ஸ்டண்டன், அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூவிஸ், பிரெஞ்சு நடிகை ழான் மொரியூ, ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க நடிகர் மார்ட்டின் லண்டௌ உள்ளிட்டோர் விழாவின்போது நினைவுகூரப்பட்டனர்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon