மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

நாகாலாந்து:புறக்கணிக்கப்பட்ட பெண் வேட்பாளர்கள்!

நாகாலாந்து:புறக்கணிக்கப்பட்ட பெண் வேட்பாளர்கள்!

நாகாலாந்து சட்டப்பேரவைக்கு இம்முறையாவது பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படுவார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் இம்முறை அதிகபட்சமாக 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி சார்பில் தலா ஒருவரும், தேசிய மக்கள் கட்சி சார்பில் 2 பேரும், சுயேட்சையாக ஒரு பெண்மணியும் போட்டியிட்டனர். 5 பெண்கள் போட்டியிடுவதால் ஒருவராவது வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அரசியல் நோக்கர்களிடையே ஏற்பட்டது.

கடந்த மார்ச் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டபோது, அபோய் தொகுதியில் தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆவான் முதல் சுற்றுகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைவிட அதிக வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அதை வைத்து, இம்முறையாவது நாகாலாந்துக்கு ஒரு பெண் எம்எல்ஏ கிடைப்பார் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் அவர் பின்னடைவைச் சந்தித்து இறுதியில் 5,131 வாக்குகள் மட்டுமே பெற்று ஏமாற்றமளித்தார்.

இதேபோல் துன்சாங் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரகிலா 2749 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாவது முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளார். இதர பெண் வேட்பாளர்கள் ஆயிரம் வாக்குகளைக் கூட பெறவில்லை.

55 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நாகாலாந்தில் இதுவரை ஒரு பெண் எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது. அம்மாநிலத்தில் ஆண்- பெண் சமத்துவத்தை சாத்தியப்படுத்துவது என்பது நீண்ட நெடிய பயணம் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது.

நாகாலாந்து அரசியலில் முக்கியத்துவம் பெற்ற ஒரே பெண் அரசியல் தலைவராக ஷாயிஷா மட்டுமே உள்ளார். கடந்த 1977ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் அப்போதைய முதல்வர் ஹோகிஷி சேமாவைத் தோற்கடித்து மக்களவைக்குத் தேர்வானார். நாகாலாந்தில் மது தடைக்கான சட்டத்தைக் கொண்டுவந்ததில் பிரதான பங்கு இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon