மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

மின் திட்டங்கள்: விளைநிலங்களில் கூடாது!

மின் திட்டங்கள்: விளைநிலங்களில்  கூடாது!வெற்றிநடை போடும் தமிழகம்

உயர் அழுத்த மின் திட்டங்களை விளைநிலங்களில் செயல்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வேளாண் விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மின் வழித்தடங்கள் அமைக்கப்படுவது அவசியம் என்றபோதிலும், அதற்காக முதன்மைத் தொழிலான வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானதாகும் என்று எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (மார்ச் 4) வெளியிட்டுள்ளார்.

அதில், "கரூர் மாவட்டம் புகழூர் முதல் ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பவர் கிரிட் நிறுவனத்தின் மூலமாக உயர் அழுத்த மின்பாதைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. அதேபோல், அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்புத் திட்டம், இராசிபாளையம் முதல் பாலவாடி வரை என பல்வேறு உயரழுத்த மின்பாதைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த மின்பாதைத் திட்டங்களின் பெரும் பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

"உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் பயன்பாட்டுக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை விவசாயம் செய்யவோ, கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்காகவோ, ஆழ்துளைக் கிணறுகள் அல்லது கிணறுகள் அமைக்கவோ பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் உழவர்களின் சொத்து மதிப்பையும், வாழ்வாதாரத்தையும் குறைப்பது மிகப் பெரிய அநீதியும், மனித உரிமை மீறலும் ஆகும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் துணைநிற்பதுதான் கொடுமையிலும் கொடுமை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, "உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதில் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் திட்டமிட்டு துரோகம் இழைக்கப்படுகிறது. இத்தகைய மின்கோபுரத் திட்டங்கள் கேரளம் வழியாகவும் செயல்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் மின்சாரக் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதைவிட, பூமிக்கு அடியில் கேபிள்களைப் புதைப்பதற்குக் கூடுதலாகச் செலவாகும், பராமரிப்புச் செலவுகளும் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதை மாற்று வழிகளில் சமாளிக்க முடியும். கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டுசெல்லப்படுவதால் குறைந்தபட்சம் 12% இழப்பு ஏற்படும். ஆனால் பூமிக்கடியில் கேபிள் மூலம் கொண்டுசெல்வதால் மின் இழப்பு ஏற்படாது. பூமிக்கடியில் கேபிள் புதைப்பதால் ஆகும் கூடுதல் செலவை, 12% மின் இழப்பு கட்டுப்படுத்தப்படுவதால் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு முழுமையாக ஈடு செய்துவிட முடியும்" என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, "தமிழகத்தில் உயர் அழுத்த மின்பாதைகளை வேளாண் விளைநிலங்களில் கோபுரம் அமைத்து கொண்டுசெல்லும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, சாலையோரங்களில் பூமிக்கு அடியில் கேபிள்களைப் புதைத்து மின்பாதைகளை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon