மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

சமூகத்தைக் கேள்வி கேட்கும் படம்!

சமூகத்தைக் கேள்வி கேட்கும் படம்!

அபியும் அனுவும் திரைப்படம் சமூகத்தை நோக்கி நிறையக் கேள்விகளை முன்வைக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகை பியா பாஜ்வாய்.

பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கியிருக்கும் திரைப்படம் அபியும் அனுவும். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தரண் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. அதில் நடிகை பியா பாஜ்பாய், நட்டி நடராஜன், நடிகை விஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பியா, “இந்த நல்ல வாய்ப்பைக் கொடுத்த விஜயலக்ஷ்மி மற்றும் சரிகம நிறுவனத்துக்கு நன்றி. இது எனக்கு ரொம்பவே சவாலான படம். இந்தக் கதாபாத்திரத்தைச் செய்ய எனக்கு எந்தப் படமும் இன்ஸ்பிரேஷனாக இல்லை. இது ரொம்பவே நேர்மையான படம், சமூகத்தில் நிறையக் கேள்விகளை முன்வைக்கும். இதில் நடித்தது பெருமையான விஷயம்” என்று தெரிவித்தார்.

“விஜயலக்ஷ்மி அவர்களின் படத்தில் வேலை செய்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ரொம்பவே வெளிப்படையாகப் பேசக்கூடிய இயக்குநர். படத்தில் இரண்டு பாடல்கள்தான். கதையைச் சொல்லும் அந்த இரண்டு பாடல்களையும் திரைக்கதையில் சிறப்பாகப் பொருத்தியிருக்கிறார். டொவினோ தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வருவார். இது நிச்சயம் பேசப்படும் படமாக அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் இசையமைப்பாளர் தரண்.

இவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ரோகிணி “விஜயலக்ஷ்மியுடன் எனக்கு நீண்ட கால நட்பு இருந்துவருகிறது. வித்தியாசமான படம்னு சொல்லித்தான் என்னை நடிக்க அழைத்தார். உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான படம். இந்தப் படத்தில் நான் தாண்டிவந்த உணர்வுகளை நான் நிஜத்தில்கூட இதுவரை உணர்ந்தது கிடையாது. இதுவரைக்கும் நான் செய்யாத விஷயங்கள் இந்தப் படத்தில் இருந்தன. அதை எனக்குக் கொடுத்த விஜிக்கு நன்றி” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“அடுத்த 5 வருடங்களுக்கு கான்செப்ட், கதையுள்ள படங்கள்தான் பேசப்படும். விஜயலக்ஷ்மி அவர்களிடம் 4 வருடங்கள் உதவியாளராக வேலைபார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் நிறையப் படங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களிடம் வேலைபார்த்ததில் கல்லூரியை விட்டு வெளியே வந்த ஒரு திருப்தி கிடைத்தது. ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலக்ஷ்மிதான். டொவினோ தாமஸ் தென்னகத்தின் இம்ரான் ஹாஸ்மி என்று கூறலாம். முத்த நாயகன் என்றால் பொருத்தமாக இருக்கும். தரண் இசை படத்துக்கு பலம். பியா பாஜ்பாயின் கதைத் தேர்வு எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. நிறைய நல்ல நல்ல படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்” என்றார் நடிகர் நட்டி.

“என்னு நிண்டே மொய்தீன் படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. நல்ல கதைக்காக நான் காத்திருந்தேன். ஒரு சில மலையாளப் படங்களை முடிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில்தான் விஜயலக்ஷ்மி மேடம் என்னைத் தொடர்ந்து கதை கேட்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தார். அவரைப் பற்றி இணையத்தில் தேடினேன். அப்போதுதான் அவர் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஜாம்பவானின் மகள் என்பது தெரியவந்தது. கதை கேட்டேன், சிறப்பான கதை. நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு படத்துக்காக சென்னையில் ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதுதான் பியாவை முதன் முறையாகச் சந்தித்தேன். தமிழ் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இந்தப் படத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. தமிழ் சினிமாவில் இது ஒரு பெஞ்ச் மார்க் படமாக இருக்கும். இதே படம் மலையாளத்திலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர், நடிகைகளுடன் நடித்தது நல்ல அனுபவம்” என்றார் நடிகர் டொவினோ தாமஸ்.

இந்தச் சந்திப்பில் இயக்குநர் விஜயலக்ஷ்மி, வசனகர்த்தா சண்முகம், எடிட்டர் சுனில்ஸ்ரீ நாயர், ஒளிப்பதிவாளர் அகிலன், நடிகை கலைராணி ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon