மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

அதிமுக எம்.பி.க்கள் நாளை ஆர்ப்பாட்டம்!

அதிமுக எம்.பி.க்கள் நாளை ஆர்ப்பாட்டம்!வெற்றிநடை போடும் தமிழகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நாளை அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு ஒரு மாதத்திற்குப் பின் இன்று (மார்ச் 5) தொடங்கியது. நீரவ் மோடியின் வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே தயாராக இருந்தன. முன்னதாக கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வட மாநிலங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடத்தில் இரு விரலை உயர்த்தி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பிரதமர் மோடிக்கு மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை வாழ்த்தும் தெரிவித்தார்.

மாநிலங்களவைத் தொடங்கியவுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், அதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, நேரமில்லா நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதனால் அவையின் மையப்பகுதிக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரும், அமைத்திடு அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்து என்று முழக்கங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அவை 11.20க்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது காவிரி விவகாரம், நீரவ் மோடி, மத்திய தேர்வுத்துறை ஆணையத்தில் நடந்த ஊழல், கார்த்தி சிதம்பரம் விவகாரம் உள்ளிட்டவை குறித்துப் குறித்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளி எழுப்பியதால் அவையை மதியம் 2மணிக்கு ஒத்திவைத்தார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு .

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை அருகே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.காவிரி விவகாரத்தில் தமிழர்களின் நலன் குறித்து மத்திய அரசு உரிய முடிவெடுக்கும் என்று நம்புகிறேன். பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon