மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 15 நவ 2019

முத்ரா கடன் திட்டத்தில் குறைந்த நிதி!

முத்ரா கடன் திட்டத்தில் குறைந்த நிதி!

பிரதம அமைச்சரின் முத்ரா யோஜானா திட்டத்தின் கீழ் 2017-18 நிதியாண்டில் இலக்கை விட மிகவும் குறைவான அளவிலேயே நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுக்காக மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட திட்டம்தான் ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம். இத்திட்டத்தின் கீழ் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாகக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதாவது, சிசு என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும் மற்றும் தருண் என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2018 பிப்ரவரி 3ஆம் தேதி வரையில் (2017-18) மொத்தம் ரூ.1.81 லட்சம் கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1.75 லட்சம் கோடி மட்டுமே நிறுவனங்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியாண்டில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.2.44 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 2016-17 நிதியாண்டில் இந்த இலக்கு ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது. வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினையால் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடனுதவி வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon