மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

புதிய சட்டப்பேரவை செயலாளர் நியமனம்!

புதிய சட்டப்பேரவை செயலாளர் நியமனம்!

சபாநாயகரின் தனிச் செயலாளராக இருந்த சீனிவாசன் தமிழக சட்டப் பேரவைக்குப் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை ஒட்டிச் சர்ச்சை எழுந்துள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவைச் செயலாளராகப் பதவி வகித்துவந்த ஜமாலுதீன் கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வுபெற்ற நிலையில், அதற்கடுத்து பூபதி சட்டப்பேரவைச் செயலாளராகப் பதவி வகித்துவந்தார். பூபதியின் பணிக்காலம் கடந்த 28ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அண்மையில் சட்டப்பேரவையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை கூட்டுவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்வது. கூட்டத் தொடரில் தினமும் நடைபெற வேண்டிய விவாதங்கள், யார் யார் பேச வேண்டும் என்னும் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது சட்டமன்றச் செயலாளரின் பணி. இன்னும் சில வாரங்களில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும்நிலையில் புதிய சட்டமன்றச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக சீனிவாசன் சட்டப்பேரவைச் சிறப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றக் கூடுதல் செயலாளர் வசந்தி மலர், இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், "சட்டப்பேரவையின் சிறப்புச் செயலாளராக சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவு ரகசியமாக உள்ளது. சட்டப்பேரவையின் நிருபராகவும் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளராகவும் உள்ள சீனிவாசனுக்கு எந்த அனுபவமும் இல்லை. திட்டமிட்டு விதிகளை மீறி, சிறப்புச் செயலாளர் என்கிற ஒரு புதிய பதவியை உருவாக்கி, அதன் பிறகு இவரைப் பேரவையின் செயலாளராக நியமிக்க உள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், சீனிவாசன் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon