மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

குடியரசுத் தலைவர் காருக்கு விரைவில் நம்பர் பிளேட்!

குடியரசுத் தலைவர் காருக்கு விரைவில் நம்பர் பிளேட்!

குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் உள்ளிட்டோரின் வாகனங்களுக்கும் விரைவில் பதிவு எண் பொருத்தப்படும் என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நியாயபூமி என்ற தன்னார்வ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், "குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் போன்றோர்களின் வாகனங்களில் பதிவு எண்ணுக்கு பதிலாக இந்திய அரசின் சின்னமான 4 சிங்கங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், தாக்குதல்களுக்கு இந்தக் கார்கள் எளிதாக இலக்காகும் வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது, அதற்கு வாகனக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதி பெற இயலாது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய போக்குவரத்து அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், “குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் உள்ளிட்டோரின் வாகனங்களைப் பதிவு செய்யச் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்குக் கடந்த ஜனவர் 2ஆம் தேதியன்றே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் அவர்களது வாகனங்களில் பதிவு எண்கள் பொருத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், துணை குடியரசுத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் வாகனங்களில் பதிவு எண் உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது

.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon