மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

திரிபுரா தோல்வி: எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை!

திரிபுரா தோல்வி: எதிர்க்கட்சிகளுக்கு  எச்சரிக்கை!வெற்றிநடை போடும் தமிழகம்

திரிபுரா தேர்தல் முடிவுகளை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ள அச்சுதானந்தன், “சங் பரிவார் அமைப்புகளைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஓர் அணியாக இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே நடைபெற்றுவந்தது. மாணிக் சர்க்கார் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான திரிபுரா தேர்தல் முடிவுகளில், பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இத்தனை ஆண்டுகளாக திரிபுராவில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் மட்டுமே ஆட்சியில் இருந்துவந்த நிலையில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் முடிவுகளின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தனது வேர்களை வலுவாக ஊன்றியுள்ளதும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் பாஜக எழுச்சி தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “நாடு இப்போது மிகவும் ஆபத்தான சவால்களை எதிர்கொண்டுவருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. அந்தக் கட்சியும் இப்போது பலவீனமடைந்து, சோர்ந்துவிட்டது.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்ததையும் மிகவும் ஆபத்தான கட்டமாகத்தான் பார்க்க வேண்டும். இடதுசாரிகள் முதலில் மேற்கு வங்காளத்தை இழந்தார்கள், இப்போது 25 ஆண்டுகள் ஆண்ட திரிபுரா மாநிலத்தையும் இழந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமடைந்துவிட்டதையே காட்டுகிறது.

சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்து அரசியல் களத்தில் போரிடுவதற்கு இடதுசாரிக் கட்சிகளும் இப்போது வலிமை இல்லாமல் இருக்கிறார்கள். ஆதலால், நாடு சந்திக்கும் சவால்களை உணர்ந்து, சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்துப் போரிட மதச்சார்பற்ற சக்திகள், கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரே அணியாகச் செயல்படுவது இந்தத் தருணத்தில் அவசியமாகும்” என வலியுறுத்தியுள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon