மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

காவலர் தற்கொலை: திருமணம் காரணமா?

காவலர் தற்கொலை: திருமணம் காரணமா?

சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை போலீஸார் தற்கொலை செய்துகொண்டது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மலைராஜாவுக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள், இரண்டாவது மனைவி பொன்னழகிக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகன் சத்தியமூர்த்தி ஹைதராபாத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் பன்னீர்செல்வம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகன் அருண் ராஜ் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியில் சேர்ந்து ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் மார்ச் 4ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருண்ராஜ், அதிகாலை நேரத்தில் கையில் வைத்திருந்த 303ரகத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண்டார். இந்தச் சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் அன்பு, அண்ணா சதுக்கம் டி6 காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி உள்ளிட்ட அதிகாரிகள் அருண்ராஜ் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவரது நண்பர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள். மேலும் அருண்ராஜுடன் திருவல்லிக்கேணி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன், பாலசந்தர் (ஆயுதப் படை போலீஸ்) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பலரிடம் நடைபெற்ற விசாரணையில் அருண் ராஜ் ஒரு சிவன் பக்தர் தைரியமானவர் மனக்குழப்பமில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தார் திருமணம் செய்துகொள்ள நிர்பந்தம் செய்ததால் கடந்த 2016ஆம் ஆண்டில் 20 நாள் காணாமல் போயிருந்தார். அவரது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீஸார் தேடியதில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் காக்கி உடைக்குப் பதிலாக காவி உடையுடன் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து அருணை மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பெற்றோர் மற்றும் சகோதரர்கள் ஆலோசனைகளுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தவரிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ள நிர்பந்தம் செய்ததால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரது ஆன்மிகத்துக்கு எதிராக யாராவது செயல்பட்டுத் துன்புறுத்தியிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. விரைவில் தற்கொலைக்கான காரணம் குறித்து கண்டறியப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon