மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

திமுக எம்.பி.க்கள் முதலில் ராஜினாமா செய்யட்டும்!

திமுக எம்.பி.க்கள் முதலில் ராஜினாமா செய்யட்டும்!

காவிரி விவகாரத்தில் அதிமுகவைத் துணைக்கு அழைக்காமல் திமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யட்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க பிரதமரைச் சந்திக்க வேண்டும் என கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு பேசிய ஸ்டாலின், "காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாகவும், உரிய துறை அமைச்சரைச் சந்திக்கச் சொல்வதாகவும் முதல்வர் தெரிவித்தார்" என்று கூறினார். மேலும் பிரதமர் சந்திக்க மறுத்த காரணத்தைக் கூறி தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று (மார்ச் 4) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "காவிரிப் பிரச்சினையை வைத்துக்கொண்டு ஸ்டாலின் அவர்கள் பிரதமரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதைப் போலப் பேசிக்கொண்டிருக்கிறார். பிரதமர் பார்க்க மறுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால் காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கில் உண்மையைத் திரித்துக் கூறுகிறார் ஸ்டாலின். இதே காவிரிப் பிரச்சினையின்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வரைச் சந்திக்க மறுத்தாரே அவர் உங்கள் கூட்டணிக் கட்சிதானே அவரிடம் கேட்டீர்களா?” என்று கேள்வியும் எழுப்பினார்.

மேலும் தமிழகத்தின் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதில் கூறிய அவர், "ராஜினாமா செய்வதற்கு ஏன் அதிமுகவை அழைக்கிறார்கள்? முதலில் திமுகவிடமுள்ள நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களையும் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு நீங்கள் சொல்வதை நான் உண்மை என்று ஒப்புக்கொள்கிறேன். எதற்கும் தயாராக இருக்கிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். பிரதமரைச் சந்திக்க கால நேரம் இருக்கிறது. செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் பிரதமர் செய்வார்" என்றும் தெரிவித்தார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon