மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: 2019இல் கிளம்புமா பரோடா பூதம்?

சிறப்புக் கட்டுரை:  2019இல் கிளம்புமா பரோடா பூதம்?

பா.சிவராமன்

இது வங்கி மோசடிகளின் சீஸன். நீரவ் மோடி ஊழலில் பஞ்சாப் நேஷனல் வங்கி சிக்கிக்கொண்டதை அடுத்து பரோடா வங்கி (Bank of Baroda) குப்தாக்கள் மோசடியில் மாட்டிக்கொண்டுள்ளது. இரண்டுமே மெகா ஊழல்கள். ஒரே வேறுபாடு என்னவென்றால் பரோடா வங்கி சம்பந்தப்பட்டுள்ள குப்தாக்களின் ஊழல் தென்னாப்பிரிக்காவில் அரங்கேறியுள்ளது. தென்னாப்பிரிக்க அதிகாரிகளோ, இப்போது பரோடா வங்கி அதிகாரிகளையும் சேர்த்து விரட்டிக்கொண்டிருக்கின்றனர்.

மார்ச்சில் ஒலிக்கத் தொடங்கியுள்ள அபாயச் சங்கு

இரண்டு நாள்களுக்கு முன்னர், 2 மார்ச் 2018 அன்று, தென்னாப்பிரிக்காவின் வழக்குத் தொடர்வதற்கான தேசிய ஆணையம் (National Prosecution Authority, நம்மூர் CBIக்கு நிகரானது), குற்ற நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட பணத்தை வைத்திருப்பதாக பரோடா வங்கி மீது குற்றம்சாட்டியது. அதுவும் இந்த அமைப்பின் வழக்கறிஞர் ஒருவர் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் இதைத் தெரிவித்தார். மறுநாளே, எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் பரோடா வங்கி அதிகாரிகள், “குற்ற நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட பணத்தை நாங்கள் தெரிந்தே வைத்திருக்கவில்லை” என மழுப்பலான பதிலொன்றைத் தெரிவித்தனர் (3 மார்ச் 2018 எகனாமிக் டைம்ஸ்).

குப்தாக்கள் யார்? அவர்கள் குற்றம் என்ன?

குப்தா சகோதரர்கள் தென்னாப்பிரிக்காவின் பிரபல வர்த்தகர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜுமாவைக் கைக்குள் போட்டுக்கொண்டு அந்நாட்டையே ஆட்டிப்படைத்தவர்கள். ஏழைச் சிறார்களுக்குப் பால் வழங்கும் பொருட்டு இவர்களின் பால் பண்ணைக்குத் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திடமிருந்து தமது செல்வாக்கைப் பயன்படுத்திப் பெருந்தொகையொன்றை இவர்கள் பெற்றனர். ஆனால் மோசடி செய்து அத்தொகையை பரோடா வங்கியில் உள்ள தமது சொந்த கணக்குக்கு மாற்றி ஊழல் புரிந்தனர். இது தென்னாப்பிரிக்க சட்டப்படி குற்றமாகும். இது சென்ற ஆண்டு மே மாதத்தில் அம்பலமானது. இவர்களின் கைப்பாவையான அதிபர் ஜுமா ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதையடுத்து எட்டு தென்னாப்பிரிக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் குழு ஒன்று குப்தாக்கள் வீட்டையும் ரெய்டு செய்தனர். ஆனால் குப்தாக்களோ போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடி துபாயிலிருந்து தம் பணியைத் தொடர்கின்றனர் .

தென்னாப்பிரிக்கப் புலனாய்வு அமைப்பினர் பரோடா வங்கியிலிருந்த எஞ்சிய பணத்தை முடக்கினர். இதற்கு எதிராக குப்தாக்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக பரோடா வங்கியும் இத்தடையை நீக்குமாறு நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றமோ இதற்கு உடனடியாக உடன்படவில்லை. ஆனால் நெருக்கடி முற்றத் தொடங்கியது. இந்த ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நழுவ பரோடா வங்கி அதிகாரிகள் தமது தென்னாப்பிரிக்கக் கிளையை இழுத்து மூட முடிவு செய்தனர். இதனால் குப்தாக்களுக்கும் பரோடா வங்கிக்குமிடையே முரண்பாடு முற்றியது. இருதரப்புமே ஒருவருக்கெதிராக ஒருவர் வழக்குப் பதிவு செய்துகொண்டனர். ஆனால் இந்த நிகழ்வுகள் வரவிருக்கும் பெரிய மோதலுக்கு ஓர் ஒத்திகையே.

பெரியதோர் இடர் வருமோ?

ஒரு நாட்டின் அதிபரையே பதவி இறங்க வைக்குமளவுக்குச் சென்றதென்றால், குப்தா ஊழலின் அரசியல் தாக்கம் எந்தளவுக்கு இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. இது ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நம்பகத்தன்மைக்கே பெரும் சவாலானது. ஜுமாவுக்கு அடுத்து வந்த ராமபோசா அரசு இதிலிருந்து மீள ஒரு திட்டத்துடன் செயல்பட்டது. தமது பெயரைக் காப்பாற்றிக்கொள்ள எந்தளவுக்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருந்தனர். தென்னாப்பிரிக்காவின் புதிய அரசாங்கமே குப்தாக்களுக்கு எதிராகத் திரும்பியது.

2011இல், ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்திலும் எல்லை கடந்த கட்டமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தங்களின் விதிகளின்படி, தென்னாப்பிரிக்க இன்டர்போல் அமைப்பை நாடினால், இந்திய அரசாங்கம் குப்தாக்களைக் கைது செய்ய வேண்டிவரும். அதுமட்டுமல்ல; பரோடா வங்கி அதிகாரிகளுக்கு எதிராகவும்கூட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.

இதைவிட முக்கியம் என்னவென்றால், இந்தியா டிசம்பர் 2005இல் குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தமொன்றை (Extradition treaty) தென்னாப்பிரிக்காவுடன் செய்து கொண்டது. இந்த ஒப்பந்த விதிகளின்படி, இந்தியா குப்தாக்களுக்கு எதிராக மட்டுமல்ல; பரோடா வங்கி அதிகாரிகளுக்கு எதிராகவும் ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் அதைவிடக் கடுமையான பணச்சலவைத் தடுப்பு சட்டம் 2002 (Money Laundering Act 2002) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

நாங்கள் தென்னாப்பிரிக்க குடிமக்கள் அல்ல; இந்தியக் குடிமக்கள் என்று சொல்லி இவர்கள் தப்பிக்க முடியாது. ஏனெனில், இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 5இன்படி குற்றம்புரிந்தவர்கள் எந்த நாட்டின் குடிமக்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. தென்னாப்பிரிக்கச் சட்டப்படி குற்றம் புரிந்த எவருக்கும் இது பொருந்தும். தென்னாப்பிரிக்கா கோரினால், குப்தாக்களை மட்டுமின்றி பரோடா வங்கி அதிகாரிகளையும்கூட வழக்கு விசாரணைக்காக அந்நாட்டிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டிவரும். தென்னாப்பிரிக்கச் சட்டப்படி அந்நாட்டு நீதிமன்றம் வழங்கும் தண்டனைக்கேற்ப அவர்கள் கம்பி எண்ண வேண்டிவரும். அது தவிர, பரோடா வங்கியில் மட்டுமின்றி இதர வங்கிகளிலுள்ள குப்தாக்களின் சொத்துகளைக்கூடப் பறிமுதல் செய்யும்படி அல்லது குறைந்தபட்சம் வழக்கு முடியும்வரை முடக்கும்படி தென்னாப்பிரிக்கா கோரவும் வழியுள்ளது. இந்தியா மறுத்தால் பிரிக்ஸ் நாடொன்றுடன் ராஜாங்க நல்லுறவு முறியும் அபாயமுள்ளது. அது குஜராத் வைர வியாபாரிகளைத்தான் பெரிதும் பாதிக்கும். ஊழலுக்கு எதிராகப் போர் புரிவதாகக் கூறிக்கொள்ளும் மோடியின் வண்டவாளமும் அம்பலமாகும்.

அதானிகளும் குப்தாக்களும் நெருங்கிய கூட்டாளிகளன்றோ!

ஓராண்டு காலத்துக்கும் மேலாக ஒரு பெரும் நாட்டையே உலுக்கி அந்நாட்டின் அதிபரையே பதவி விலகச் செய்யுமளவுக்கு இவ்வளவு நடந்தும் மௌனச் சாமியார் மோடி மட்டுமல்ல; அவரது நிதியமைச்சர் ஜேட்லியோ, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவோகூட இது குறித்து வாய் திறக்கவில்லை! ஏன்? காரணமில்லாமலில்லை.

அதிகாரத்திலுள்ள அரசியல் தலைவர்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டு தவறான வழிகளில் தமது தொழிலைப் பெருக்கிக்கொள்ளும் தில்லுமுல்லு எடுபிடி முதலாளிகளை ஆங்கிலத்தில் Crony capitalists என அழைப்பது வழக்கம். 15 ஜூன் 2017 அன்றே ஸ்காட்லாந்து எடின்பர்க் நகரிலிருந்து வெளிவரும் வணிக இணையதளமான biznews.com முக்கிய செய்தியொன்றை வெளியிட்டது. குப்தாக்கள் மோடிக்கு மிக நெருக்கமான அதானிகளுடன் கூட்டுசேர்ந்து தென்னாப்பிரிக்க அரசாங்கத்தில் தமக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தென்னாப்பிரிக்க அரசின் ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்பத்தை மலிவாகப் பெற்று ரூ.50,000 கோடிக்கு அதை இந்திய அரசாங்கத்துக்கு விற்க ஒரு கூட்டு நிறுவனத்தை இவர்கள் தொடங்கியுள்ளதாக வந்த செய்திதான் அது.

குப்தாக்கள் மற்றும் அதானிகள் ஆகியோருக்கிடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களின் அடிப்படையில் கிடைத்த விவரங்களைக் கொண்டு ஆப்பிரிக்க மொழியில் ‘ஆமபுங்கனே’ என்றழைக்கப்படும் புலனாய்வுப் பத்திரிகையாளர்களுக்கான மையத்தை (Center for Investigative Journalists) சேர்ந்த பத்திரிகையாளர்களால் இது அம்பலமாக்கப்பட்டது. இது பனாமா பேப்பர்களை (Panama Papers) வெளியிட்ட புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (International consortium of Investigative journalists - ICIJ) போன்றது. பொதுநல பத்திரிகைப் பணிக்காக தென்னாப்பிரிக்காவில் செயல்படும் அமைப்பு. [மேலும் விவரங்களுக்குப் பின்வரும் இந்த இணையதளப் பக்கத்தைக் காண்க https://www.biznews.com/guptaleaks/2017/06/15/gautam-adani-gupta-leaks/] அதானிகள் எவருக்கு பினாமிகளாகப் பணிபுரிந்தார்களோ என்னவோ யாருக்குத் தெரியும்?

துபாய் மாஃபியா கோணம்

இந்தச் சதிச் செயலுக்கு மற்றொரு பரபரப்பான கோணமும் உண்டு. தென்னாப்பிரிக்காவிலிருந்து தப்பித்த பிறகு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிய குற்றவாளி என்று அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட குப்தா துபாய்க்கு மாறி தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தில் தொடர்ந்து தம் வழக்குகளை அங்கிருந்து நடத்திக்கொண்டிருந்தார். இது ஊழலுக்கும் அப்பாற்பட்ட விஷயம் என்று கோர்ட்டாரே அங்கலாய்க்குமளவுக்குச் சென்றது. அதுமட்டுமல்ல; கேடுகெட்ட துபாய் மாஃபியா கும்பல்களுடன் குப்தாக்களுக்கு இருக்கும் தொடர்புகள் பற்றியும் மும்பை நிழலுலகம் -பாலிவுட் முதலீட்டாளர்கள் – துபாய் மாஃபியா முக்கோணத்துக்குப் பணப் பரிமாற்றத்துக்கு வழிவகுத்து பணச்சலவைக்கு உதவ இந்தியப் பொதுத் துறை வங்கிகள் பணிபுரிவது குறித்தும் தென்னாப்பிரிக்க மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் மத்தியிலும்கூட முணுமுணுப்பு அதிகரித்தது.

ஆர்எஸ்எஸ்ஸின் (RSS) மனசாட்சியாக விளங்குவதாகத் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக்கொள்ளும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘உங்கள் நீதிமன்றம்’ (AApkiAdaalat) நிகழ்ச்சியில், சசி தரூர் துணை சுனந்தா புஷ்கரை ஐபிஎல் பணப்பட்டுவாடா மோசடிகள் பின்னணியில் கொன்றது துபாய் மாஃபியாதான் என ஆணித்தரமாக வாதிட்டார். ஸ்ரீதேவியின் மர்மச்சாவு விஷயத்திலும் கிட்டத்தட்ட இதே கருத்தை அவர் மறைமுகமாக வெளியிட்டார். இத்தகைய ஆபத்தான புதைகுழிக்குள் பரோடா வங்கி இப்போது இறங்கியுள்ளது.

புகையும் அரசியல் வெடிகுண்டு

விந்தை என்னவென்றால், மோடி வாரணாசியில் மட்டுமின்றி பரோடாவிலிருந்தும் (Vadodara) கூட 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அதே பரோடாவைத் தன் பெயரில் கொண்ட வங்கி ஊழல் பூதாகரமாகக் கிளம்பி 2019இல் அவரை வாட்டுமா? ரஃபேல் போர் விமான பேர ஊழல் குற்றச்சாட்டு போல ஒரு மினி ரஃபேலாகப் பூதாகரமாகக் கிளம்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon