மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டோம்!

சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டோம்!

நடிகைகள் படும் கஷ்டங்களை மக்கள் புரிந்துகொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.

நடிகைகள் என்றாலே, வசதி படைத்தவர்கள், அளவுக்கு அதிகமாகப் பணம் சம்பாதிப்பவர்கள் என்ற பொதுவான கருத்துண்டு. ஆனால் சாதாரணப் பெண்களைவிட நடிகைகளுக்குத்தான் மன பலம் அதிகம் என்பதை பலர் அறிவதில்லை. இதை நடிகைகள் பலர் தங்கள் பேச்சிலும் செயலிலும் அவ்வப்போது உண்மையாக்கிவருகின்றனர்.

சமீபத்தில் நடிகைகளின் வாழ்க்கையைக் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டி ஃபர்ஸ்ட் ஸ்பாட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் “நடிகைகள் என்றாலே சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். நாங்கள் படும் கஷ்டங்களை மக்கள் புரிந்துகொள்வதில்லை. நாங்களும் நெருக்கடியில் வாழ்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. நடிகைகள் யாரும் இங்கு முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. இரவு பகல் பாராமல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்கிறோம். ஒரு நிமிடம்கூட ஓய்வில்லாமல் உழைக்கிறோம்” என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

“சொந்தப் பணிகளுக்காக நேரம் ஒதுக்க முடியாது. குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. கதாநாயகிகள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்; பெயர், புகழ் இருக்கிறது என்று எளிதாகச் சொல்லிவிடுகிறவர்களுக்கு எங்களுக்குப் பின்னால் இருக்கும் இதுபோன்ற கஷ்டங்கள் தெரிவதில்லை. நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் படப்பிடிப்புகளுக்காக ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன். விரும்பிய உணவுகளை என்னால் சாப்பிட முடியவில்லை. அழகுக்காகவும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வருத்த வேண்டியுள்ளது. எங்கள் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டோம். சாதாரண பெண்களைப் பார்க்கும்போது நம்மால் அவர்களைப்போல் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது” என்று தன் எண்ணத்தை தெரிவித்துள்ளார்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon