மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

பாஜக, காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணி!

பாஜக, காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணி!

காங்கிரஸ் மற்றும் பாஜகவைத் தோற்கடிக்க 3ஆவது அணி தேவைப்படுகிறது எனத் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த மார்ச் 3ஆம் தேதி ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆட்சியில் இதுவரை என்ன நன்மை ஏற்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியதோடு, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டிற்கு ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது; இந்த இரு கட்சிகளையும் தோற்கடிக்க ஒரு 3ஆவது அணி அவசியம் என வலியுறுத்தினார்.

"மொரார்ஜி தேசாய், வி.பி சிங், தேவகவுடா ஆகியோரின் சிறப்பான ஆட்சியை யாராலும் மறக்க முடியாது. அதேபோன்று ஒரு சிறப்பான ஆட்சியை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத ஒரு அணியால் தர முடியும். 3ஆவது அணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. தற்போதைய அரசியலிலிருந்து மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் எந்தத் திறன்மிக்க மாற்றமும் ஏற்படவில்லை. ஏமாற்றமே மிச்சம். நாட்டில் ஏன் நக்ஸலைட்கள் உள்ளனர்? ஏன் அமைதியின்மை அதிகளவு உள்ளது? சமூக ரீதியான சண்டைகள் ஏன் எங்கும் உள்ளது? ஏன் தலித் மற்றும் பழங்குடியினர் போராடி வருகின்றனர்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

பாஜக, காங்கிரஸ் இல்லாத ஆட்சியை அமைப்பதற்குத் தெலுகு தேசம் கட்சியுடன் கைகோர்க்கவும் தயாராக இருப்பதாக சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

3ஆவது அணி குறித்த அவரது விருப்பத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சந்திரசேகர ராவ் உடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் மம்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டே நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த 3ஆவது அணி குறித்த பேச்சு காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியை விரும்பாத கட்சிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon