மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

சிறப்புப் பேட்டி: நதிநீர் இணைப்பு அவசியமா?

சிறப்புப் பேட்டி: நதிநீர் இணைப்பு அவசியமா?வெற்றிநடை போடும் தமிழகம்

அரிஃப் ஹுசைன்

நதிநீர் இணைப்புத் திட்டத்தில் புதிதாக எதையும் இந்த அரசாங்கம் அறிவிக்கவில்லை. இந்தத் திட்டங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார் சுற்றுச்சூழலியலாளரும் நீர் மேலாண்மை வல்லுநருமான டாக்டர் ரவி சோப்ரா. இவர் டேராடூனில் உள்ள மக்கள் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராகவும், டெல்லியில் உள்ள ஹிமாலயா பவுண்டேசன் அமைப்பின் நிர்வாக அறங்காவலராகவும் விளங்குகிறார். தி வயர் ஊடகம் இவருடன் நடத்திய நேர்காணலின் தமிழ் மொழியாக்கத்தை இங்கு காண்போம்.

கடந்த சில ஆண்டுகளாக நதிநீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றன. தற்போதைய அரசின் பல்வேறு துறைகள் இதுகுறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான செலவீடுகள் குறித்தும் மதிப்பிட்டுள்ளன. இதுகுறித்த உங்கள் பார்வை என்ன? இந்தத் திட்டங்கள் நதிகளை பாதுகாக்க சிறந்த வழிகளா?

இந்த மொத்தத் திட்டமும் வேடிக்கையானது தான். நான் மட்டும் நகைக்கவில்லை. இந்த ஆலோசனைகள் 1960ஆம் ஆண்டில் ஏர்லைன் பைலட் என்ற பெயரில் முதன்முதலில் வழங்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு தஸ்தூர் தலைவராக இருந்தார். இவர் கார்லேன்ட் கால்வாய் திட்டத்தை பரிந்துரைத்தார். இந்தத் திட்டத்தின்படி கங்காவிலிருந்து தென் நதிகளுக்குத் தண்ணீர் வழங்க தஸ்தூர் ஆலோசனை வழங்கினார். இவர் மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஆவார். அதேபோல மற்றொரு பொறியாளரான கே.எல்.ராவ் என்பவரும் 1960ஆம் ஆண்டில் கார்லேன்ட் கால்வாய் திட்டத்தை வலியுறுத்தினர். எனக்குத் தெரிந்து இதுதான் நதிநீர் இணைப்புக்கான முதல் கூற்றாகும் என்று நினைக்கிறேன்.

மொத்த திட்டமும் வேடிக்கையாக என்று கூறுகிறீர்கள். இந்தக் வேடிக்கை எங்கிருந்து தொடங்கியது?

முதலாவதாக நம்மிடம் இயற்கையாகவே கார்லேன்ட் கால்வாய்கள் இருக்கின்றன. கங்காவும் ஒரு வகையான கார்லேன்ட் கால்வாய் தான். இமய மலைகளில் இருந்து தொடங்கும் கங்கை பல்வேறு எல்லைகளைக் கடந்து கடலில் கலக்கிறது. ஆனால் நம்மால் இந்த நதி முழுவதையும் நிர்வகிக்க இயலவில்லை. அது நமக்கு குழப்பமாக இருக்கிறது.

இரண்டாவது வேடிக்கை என்னவென்றால், நதிநீர் இணைப்பின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் வட மாநில நதிகளிலிருந்து தண்ணீரை தென் மாநிலங்களுக்கும், வறட்சியான பகுதிகளுக்கும் வழங்குவது தான். பருவமழை வெள்ளம் போன்றவற்றால் வடமாநில நதிகளில் தண்ணீர் நிறைந்திருக்கிறது. தென்மாநில அணைகளிலும் தண்ணீர் நிறைந்தே காணப்படுகிறது. வடக்கில் பனிப்பாறைகள் நிறைந்திருப்பதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் நதிகளில் பாய்கின்றன.

உதாரணமாக கங்காவில், பகிரதி மற்றும் அலக்நந்தா தேவ்பிரயாக்கில் இணைந்து கங்காவில் சென்று கலக்கின்றன. ஆண்டுமுழுவதும் தேவ்பிரயாக்கில் 27 சதவிகித தண்ணீர் உற்பத்தியாகி பாய்கிறது. இங்கு பனிப்பாறைகளின் உருகும் விகிதமும் 27 சதவிகிதமாக உள்ளது. இதன்மூலம் வட மாநில நதிகளை பனிப்பாறைகள் ஆண்டுமுழுவதும் வற்றாமல் காக்கின்றன என்பது உறுதியாகிறது. ஆனால் தென்னிந்திய நதிகள் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்கு தான் தயாராகவே இல்லை.

கேன்-பெத்வா தான் முதலில் இயங்கப்பெற்ற நதிநீர் இணைப்புத் திட்டமாக உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியும் சில மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டது. இந்தக் குறிப்பிட்ட திட்டத்தில் உள்ள சிக்கல்கள் என்னவென்று விளக்க முடியுமா?

கேன்-பெத்வாவின் தற்போதைய நிலையைப் பார்த்தோமானால், அதுபற்றி எங்கள் நிறுவனத்தின் சார்பாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். இவையிரண்டும் அருகருகில் உள்ள இரண்டு பள்ளங்கள். கேன் கிழக்கிலும், பெத்வா மேற்கிலும் உள்ளது. ஒரு ஆண்டில் பெத்வா வறட்சியடைந்தால் கேனும் வறட்சியடையும். கேனில் வெள்ளப்பெருக்கு என்றால் பெத்வாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இரண்டும் அருகில் தான் இருக்கின்றன. மழைப்பொழிவும் இரண்டு பகுதிகளிலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். காலநிலைகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். இந்தத் திட்டமே அர்த்தமற்றது.

பெத்வா கேனை விட சற்று பெரியது. ஆனால் காடுகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்காக அமைந்துள்ளது. அதனால் மத்திய இந்தியாவின் தண்ணீர் கேனை நோக்கித்தான் வழிந்தோடுகிறது. கேன் பகுதியில் மக்கள்தொகையும் குறைவுதான். பெரிய நகரங்கள் எதுவும் இங்கு இல்லை. தொழிற்சாலைகளும் எதுவுமில்லை. இங்கு அதிகளவில் பழங்குடியின மக்கள் தான் வாழ்கின்றனர். இவர்களும் வேளாண்மைக்கு பாசனம் செய்யும் முறையை இன்னமும் பழகவில்லை. இதனால் இப்பகுதிக்கு தண்ணீர் தேவையே அதிகம் இப்போதைக்கு இல்லை.

பெத்வா போபாலுக்கு பின்பகுதியில் உள்ளது. போபால்-விதிஷா-ஜான்ஸி பகுதிகளுக்கு அருகில் பெத்வா இருக்கிறது. பெத்வாவில் விவசாயத்திற்கு அதிகளவிலான பாசன நீரை பயன்படுத்துகின்றனர். சோயாபீன் விவசாயத்தை இப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு இங்கும் இல்லை. மத்தியப் பிரதேச அரசும் பெத்வா அணையில் தண்ணீர் போதுமான அளவிற்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒருவேளை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் தமிழ்நாடு-கர்நாடகாவில் நிலவும் நிலையைப் போல முரணை வளர்க்க வேண்டுமானால் இந்த இணைப்பு பயன்படலாம்.

நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கான மதிப்பீட்டைக் கணக்கில் கொண்டால் பல மதிப்பறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதில் சில பெரும் உள்கட்டமைப்புத் திட்டமான இதற்கு அதிக செலவாகும் என்று கூறுகின்றன. சில மதிப்பீடுகள் குறைவாகத்தான் ஆகுமென்று மதிப்பிட்டுள்ளன. இத்திட்டத்தினை நிறைவேற்ற எவ்வளவு செலவாகும் என்பதற்கான உங்களுடைய மதிப்பீடு என்ன?

நதிநீர் இணைப்புக்கான செலவு என்று எடுத்துக்கொண்டால் போது மதிப்பீட்டின் படி 5.56 லட்சம் கோடி ரூபாயாகும் (டிரில்லியன்). இது பதினைந்து ஆண்டுக்கு முந்தைய கணக்கீடாகும். இப்போது கூடுதலாக செலவாகலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டாலே 25 லட்சம் கோடி ரூபாய் வரையில் செலவாகலாம். சில திட்டங்களை பார்க்கும்போது அவற்றை நிறைவேற்றுவதற்குள் அவற்றிற்கு ஆன செலவுகளின் அடிப்படையில் தான் ஐந்து மடங்கு கூடுதலாக செலவாகும் என்று கூறுகிறேன். இதற்கு நர்மதா பள்ளத்தாக்கு திட்டம் சிறந்த உதாரணமாகும்.

மற்றொரு காரணி என்னவென்றால், நதிநீர் இணைப்புக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் இன்னும் பெறப்படவில்லை. இது மிகப்பெரிய பணி. அரசு ஏஜென்சிகள், பொறியாளர்களை வைத்து இந்தப் பணியை முடிப்பதற்கு நீண்ட காலமாகலாம்.

சிவில் சமூக ஆர்வலர்கள், மக்கள் அறிஞர்கள், குடிமக்கள் ஆகியோரின் அணுகுமுறை நதிநீர் இணைப்புத் திட்டத்தில் என்னவாக இருக்கவேண்டும்?

இதில் நமது பார்வையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படாது. மாறாக கட்டுமான நிறுவனங்கள், அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு தான் இந்தத் திட்டம் பெரிதும் பயன்படும். இந்த நாட்டில் பலருக்கு நீர் மேலாண்மை குறித்து தெரிவதில்லை.

இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?

இந்த யோசனையை நம்புவதற்கு ஒரு மூன்றாம் தர பொறியாளர் இருந்தாலே போதுமானது.

இந்தத் திட்டம் பாஜகவின் தொடர் முழக்கமாக உள்ளது. காங்கிரஸ், பாஜக இரண்டுமே இதில் ஒரு நிலைப்பாட்டில் தான் உள்ளன. ஆனால் வாஜ்பாயின் முக்கியத் திட்டமாக இது இருந்தது. இப்போது மீண்டும் சூடுபிடிக்கிறதா?

வாஜ்பாய் காலத்தில் இந்தத் திட்டம் பற்றி பேசப்பட்டது. மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஆராய்ச்சி அமைப்பான தேசிய தண்ணீர் மேம்பாட்டு நிறுவனம் இதுகுறித்த அடிப்படை ஆய்வுகளை நடத்தியுள்ளது. இன்றைய சூழலில் இதை நிறைவேற்ற பல்வேறு பல்வேறு சிக்கல்கள் நிறைந்துள்ளன. இந்தப் பணிக்கு அதிக பணம் தேவைப்படும். பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon