மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

வேலை நிறுத்தமும் வெளியீட்டு அறிவிப்பும்!

வேலை நிறுத்தமும் வெளியீட்டு அறிவிப்பும்!

தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் விஷால் தனது இரும்புத்திரை படத்தின் சென்சார், புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. வேலைநிறுத்தத்தின் போது படங்களை வெளியிடக்கூடாது என்பது மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது என விவாதிக்கப்பட்டது. இதற்கு சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தாராவி படத்தை தவிர இந்த வாரம் எந்த படமும் வெளியாகாத போதும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, பாடல் வெளியீடு போன்றவை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. தற்போது விஷாலும் இதில் ஈடுபட்டுள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்த படம் ஜனவரி மாதமே வெளியாவதாக இருந்து தள்ளிப்போனது. தற்போது படத்தை தணிக்கை செய்ய படக்குழு அனுப்பியது. எந்த வெட்டும் இல்லாமல் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த தகவல், படத்தை தயாரித்த விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடைகாலத்தை முன்னிட்டு படம் திரைக்குவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் போது படம் வெளியீடு பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon