மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

ஃபுட் கோர்ட்: ஹிமாச்சலின் பாரம்பரிய உணவு!

ஃபுட் கோர்ட்:  ஹிமாச்சலின்  பாரம்பரிய உணவு!

இமயத்தின் சாரலில் அமைந்துள்ள ஹிமாச்சல் பிரதேசத்தின் உணவுமுறையில் பஞ்சாப் மற்றும் திபெத்திய உணவுகளின் தாக்கம் அதிகம். மலைப்பிரதேசம் என்பதால் ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் கிடைப்பது குறைவு. அதனால் வகை வகையான அசைவ உணவுகளை, அரிசி மற்றும் பருப்பு வகைகளுடன் சேர்த்து சமைக்கின்றனர். தரமான பாசுமதி அரிசியும் இங்கு கிடைக்கிறது. சமவெளிப் பகுதிகளில் பழங்கள், காய்கறிகள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.

இவர்கள் சமைக்கும் பெரும்பாலான டிஷ்கள் குறைந்த வெப்பத்தில் தயாரிக்கப்படுபவை. மேலும் தனித்துவமான பிளேவர் மற்றும் அரோமாவில், புளிப்புச் சுவையுடைய உணவுகளைச் சமைக்கின்றனர். ஹிமாச்சல் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் கோதுமை, பார்லி மற்றும் சிறுதானியங்களை அதிகமாக உபயோகிக்கின்றனர். ஹிமாச்சல் பிரதேச உணவுகள் மிகவும் சுவையாகவும், காரமாகவும் உள்ளன. தாம் என்பது விழாக்காலங்களில் சமைக்கப்படும் புகழ்பெற்ற உணவாகும். அதேபோல் ஹிமாச்சல் பிரதேச மக்கள் பல வகை தேநீரையும் விரும்பிப் பருகுகின்றனர். தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றை உணவுகளில் அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்றனர். ஹிமாச்சல் பிரதேசத்தின் பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி காண்போம்.

தாம்

ஹிமாச்சலில், தாம் உணவு இல்லாத விழாக்களே இல்லை என்று சொல்லாம். ராஜ்மா, பச்சை பயிறு மற்றும் அரிசி ஆகியவற்றைத் தயிரில் சேர்த்து, இந்த உணவு சமைக்கப்படுகிறது. இவற்றுடன் வேகவைத்த பருப்பு மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் மிதா பட் என்ற இனிப்பு வகையும் வழங்கப்படுகிறது. பாரம்பரிய முறையில் இலைகளில் இவ்வுணவு பரிமாறப்படுகிறது. சாம்பா பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இந்த உணவைச் சமைக்கின்றனர்.

சன்னா மத்ரா

ஹிமாச்சல் பிரதேசத்தின் புகழ்பெற்ற வெஜிடேரியன் கிரேவி உணவு சன்னா மத்ரா. மத்ரா எனப்படுவது தயிரையும் கடலைமாவையும் கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான கிரேவி. இதனுடன் வெள்ளைக் கொண்டைக்கடலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைக்கப்படுகிறது. சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சா கொஸ்த்

பிரபலமான, மிகவும் சுவையான அசைவ உணவு சா கொஸ்த். ஆட்டிறைச்சியைக் கடலைமாவு மற்றும் தயிருடன் ஊறவைத்து, பின்னர் ஏலக்காய், மிளகாய்த் தூள், பே லீப், மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு, பேஸ்ட் ஆகிய மசாலா பொருட்களைச் சேர்த்து கிரேவி போன்று சமைக்கப்படுகிறது.

குல்லு ட்ரவுட்

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்லு பகுதியின் பிரபல மீன் உணவு குல்லு ட்ரவுட். ட்ரவுட் என்பது குளத்தில் கிடைக்கும் ஒரு மீன் வகை. மசாலாவில் ஊறவைக்கப்பட்ட மீன், கடுகு எண்ணெய் கொண்டு வறுக்கப்படுகிறது. அதிகமான மசாலாப் பொருட்களைச் சேர்க்காமல், இயற்கையான பிளேவரில் மிகவும் சுவையுடன் இந்த மீன் உணவு தயாரிக்கப்படுகிறது.

டட்கியா பாத்

டட்கியா பாத் என்பது ஒரு வகையான புலாவ் உணவு. அரிசியுடன் பயிறு, உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து வேகவைக்கப்படுகிறது. இதனுடன் மசாலாப் பொருட்களாக பே லீஃப், ஏலக்காய், பட்டை, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து புலாவ் உணவு தயார் செய்யப்படுகின்றது. இந்த புலாவ் உணவானது பெரும்பாலும் வேகவைத்த பருப்புடன் பரிமாறப்படுகிறது.

மித்தா

ஹிமாச்சல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் புகழ்பெற்ற டெசர்ட் உணவு மித்தா. அரிசியுடன் சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, நெய் ஆகியவற்றைச் சேர்த்து மித்தா சமைக்கப்படுகிறது. இந்த உணவு வெவ்வேறு முறைகளில் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்டாலும், ஹிமாச்சல் பிரதேசத்தின் முக்கியமான உள்ளூர் இனிப்பாக இது கருதப்படுகிறது.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon