மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -7

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -7

-இராமானுஜம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் டிஜிட் டல் நிறுவனங்கள் கட்டண குறைப்பு செய்ய வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த பிரச்சினையை திசை திருப்பும் வகையில் நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்ற கருத்துடன் கலகக் குரல் எழுப்பிய முதல் திரைப்பிரபலம் திருப்பூர் சுப்பிரமணி.

நடிகர்கள் சம்பளம், வசூல் விபரங்கள் பற்றி புள்ளி விபரங்களுடன் ஆடியோ பதிவில் நேர்மையுடன் பேசிய சுப்பிரமணி டிஜிட்டல் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டண உயர்வு செய்து வருவதை மறதியாகவோ, தவறியும் கூட குறிப்பிட்டு சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் வியாபாரம், வெளியிடல் இவற்றைத் தீர்மானிக்கும் சக்திகளாக தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தப்படுபவர்களில் திருப்பூர் சுப்பிரமணி முதன்மையானவர்.

கோவை விநியோகப் பகுதியில் சுமார் 68 திரையரங்குகள் இவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியாவுக்கு திரைப்படங்கள் வாங்குபவர்கள் இவரை மீறி எதுவும் செய்ய இயலாது.

கோடிக்கணக்கில் முதல் போட்டு படத்தை வாங்கிய விநியோகஸ்தர், தியேட்டர்களில் தன் படத்தைத் திரையிட எவ்வளவு அட்வான்ஸ் என்பதைக்கூட கேட்க முடியாது. அதை சுப்பிரமணிதான் தீர்மானிப்பாராம். அவரது முடிவை மறுக்கும் பட்சத்தில் கோவை ஏரியாவில் அந்தப் படத்திற்கு தியேட்டர் கிடைக்காது. சுப்பிபிரமணி கோவை ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வேறு. இதனால் கோவை ஏரியா விநியோக உரிமை வாங்குவதற்கு புதியவர்கள் விருப்பம் காட்டுவதில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள், வேறு வழியின்றி திருப்பூர் சுப்பிரமணி அல்லது இவரைப்போன்று இருக்கும் கொங்கு மண்டல சினிமா குறுநில மன்னர் ராஜ மன்னார் இவர்களில் ஒருவரிடம் அட்வான்ஸ் அடிப்படையில் படத்தைக்கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் சு.பா என்று அன்போடு இன்றைக்கும் அழைக்கப்படும் சுப்பிரமணி சினிமா விநியோகத்துறையில் 165 ரூபாயுடன் தொழிலுக்கு வந்ததாக திரைப்பட விழா மேடைகளில் பெருமையாக சொல்வார். அடிக்கிற முதல் அடி நம்முடையதாக இருக்கணும். அப்பதான் எதிரி பயப்படுவான் என்பது மதுரை ஏரியாவின் பழமொழி. அதனை மதுரைக்காரர்களைவிட அதிகம் கடைப்பிடிப்பது சு.பா.வாகத்தான் இருக்கும்.

சினிமாவில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதல் குரலில் அதிரடியாக சினிமாவை காக்கும் கிருஷ்ணராகவே பேசுவார். பிறர் செய்யும் தவறுகளை புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைப்பார். திரையரங்குகள் பக்கமும் சில தவறுகள் இருப்பதாகப் போகிற போக்கில் கூறி விட்டு, அதைப்பற்றி எந்த புள்ளி விபரமும் கூறாமல் பேச்சை திசைமாற்றுவதில் சு.பாவுக்கு நிகர் அவரே.

முதலில் உரக்க பேசிவிட்டால் உண்மையாகிவிடும் என்ற நினைப்பில் டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டண உயர்வை கண்டிக்கவோ, அதனை சரிசெய்ய தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படத் தயார் எனக் கூறவில்லை சு.பா. அதைவிடுத்து நடிகர்கள் சம்பளத்தைப்பற்றி பேசி பிரச்னையை திசை திருப்ப காரணம், டிஜிட்டல் நிறுவனங்களால் அதிகமான பயன்களையும், வருவாய்களையும் பெறக்கூடிய நான்கு நபர்களில் முதன்மையானவர் சுப்பிரமணி எனத் திரையுலகினரால் கூறப்படுகிறது. அதனால் தான் சுப்பிரமணி டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை என்கிறார்கள். அப்படி என்னதான் சலுகை, சட்டத்துக்கு புறம்பான வருமானம்? நாளை காலை 7 மணி பதிப்பில்.

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon