மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

வெற்றிக்கு தடையாக ஒரு விக்கெட்!

வெற்றிக்கு தடையாக ஒரு விக்கெட்!

தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 293ரன்களைச் சேர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கடந்த (மார்ச் 1) வியாழனன்று தொடங்கியது. அதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 351 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 162 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.189 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். எனவே 227 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே 417 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் (9), ஹசிம் அம்லா (8), ஏ பி டி வில்லியர்ஸ் (0) மற்றும் ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் (4) ஆகியோர் குறைவான ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். எனவே தென்னாப்பிரிக்க அணி நம்பிக்கை இழந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ஏய்டன் மார்க்ராம் மற்றும் டீ பிரைன் இருவரும் அணியை சிறிது நேரம் விக்கெட் இழப்பின்றி காத்து ரன் சேர்த்து வந்தனர். டீ பிரைன் 36 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர் தொடக்க வீரர் ஏய்டன் மார்க்ராம் உடன் விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் சேர்ந்து விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். ஏய்டன் மார்க்ராம் சிறப்பாக விளையாடி 143 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோர் நல்ல நிலையை அடைய உதவினார். ஆனால் அவர் ஆட்டமிழந்த பின்னர் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் காகிசோ ரபடா, கேசவ் மகராஜ் மற்றும் பில்லாண்டர் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர். எனவே மீண்டும் தென்னாப்பிரிக்க அணி பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் பின்னர் களமிறங்கிய மோர்னி மோர்க்கல் 27 பந்துகளை சந்தித்த பின்னரும் ஒரு ரன்னும் அடிக்காமல் நிதானமாக விளையாடி குவின்டன் டி காக்கிற்கு துணையாக விளையாடி வருகிறார்.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்களைச் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 124 ரன்கள் தேவை, ஆனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே போதுமானது. 81 ரன்களுடன் குவின்டன் டி காக் களத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அணி விக்கெட் கீப்பரின் நான்காவது இன்னிங்ஸ் அதிகபட்ச 103 ஆகும். கடந்த 2013ஆம் ஆண்டு டி வில்லியர்ஸ் இந்த சாதனையைப் படைத்தார். அவரைத் தொடர்ந்து 81 ரன்களுடன் குவின்டன் டி காக் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்று நடைபெறவிருக்கும் இறுதி நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று சாதனை படைக்குமா அல்லது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுமா என பொறுத்திருந்து காண்போம்.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது