மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு!

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு!

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

அஜய் ஏன் நன்றாகப் படிக்கவில்லை?

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஒரு மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ சரியாக எழுத வரவில்லை என்றால், அவர்களது புறங்கையில் கம்பினால் அடிப்பது ஆசிரியர்களின் வழக்கமாக இருந்தது. சரியாக எழுதாமலிருப்பதென்பது வேண்டுமென்றே செய்யும் தவறாகவோ அல்லது கவனக்குறைவாகவோ அல்லது சோம்பேறித்தனமாகவோ பார்க்கப்பட்டது. ஆனால், இது மூளையின் செயல்திறனிலுள்ள குறைபாடு என்பது இப்போது பரவலாகப் பலருக்கும் தெரிந்துள்ளது. ஆனாலும், இதற்கான தீர்வை நோக்கி நாம் எந்தக் காலகட்டத்தில் செல்கிறோம் என்பதைப் பொறுத்தே, இந்நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பின்விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.

கற்றலில் குறைபாடா?

கற்றலில் குறைபாடு என்பது, இன்று பத்தில் ஒரு குழந்தைக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியொரு குழந்தையாகத்தான் அஜய் எங்களிடம் வந்தார். அப்போது, சென்னையிலுள்ள புகழ்பெற்ற பள்ளியொன்றில் அவர் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்., அந்தப் பள்ளியில் 100 சதவிகிதத் தேர்ச்சி நிச்சயம் என்பதும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 80-90 சதவிகித மதிப்பெண் பெறலாம் என்பதும், அந்தப் பள்ளியின் பெருமைகளாகப் பெற்றோர்களால் சொல்லப்படுபவை. அஜய்யை எங்களிடம் அழைத்துவந்த அவரது பெற்றோரும் அவ்வாறே இருந்தனர்.

அந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க மற்றவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா எனும் தொனியிலேயே, அவர்களது கவலைகள் இருந்தன. அவர்கள் அவ்வாறு பேசியதற்கும் காரணம் இருந்தது. அஜய்யின் பெர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்று, ஒரு மனநல மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கிவரச் சொல்லி நிர்பந்தம் அளித்திருந்தது அந்தப் பள்ளி நிர்வாகம். அதனாலேயே அப்போது அவர்கள் எங்களைத் தேடி வந்திருந்தனர்.

சரியாகப் படிக்கவில்லை; வகுப்பில் எதையும் ஒழுங்காக எழுதுவதில்லை; ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிவதில்லை; பத்து முறை சொல்லிக்கொடுத்தாலும் புரிந்துகொள்வதில்லை; புத்தகத்தைச் சரிவர வைத்துக்கொள்வதில்லை; கணிதத்தில் பூஜ்யம் மதிப்பெண் வாங்குகிறார்; பாடம் நடத்தும்போது வகுப்பில் பேசிக்கொண்டிருக்கிறார்; மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறார் என்று அஜய் பற்றி பல குற்றச்சாட்டுகளை அவரது பெற்றோரிடம் அடுக்கியிருந்தது அந்தப் பள்ளி நிர்வாகம்.

அஜய்யினால் தங்கள் பள்ளிக்குக் கெட்ட பெயர் வருமென்றும், அவர் மேற்கொண்டு அங்குக் கல்வி கற்பதை விரும்பவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் நாசூக்காகத் தெரிவித்திருந்தது. இது புரிந்ததாலேயே, அஜய்யின் பெற்றோர் டென்ஷனாக இருந்தனர். நாங்கள் தரும் சான்றிதழை வைத்து அஜய்யைப் பள்ளியில் நீக்கிவிடுவார்கள் என்பதே நிலைமை.

இந்த நிலையில், நாங்கள் அஜய்யைச் சோதித்துப் பார்த்தோம். அவரது பெற்றோருடன் பேசினோம். அப்போது, சிறுவயதிலிருந்தே அஜய்க்குக் கல்வி ஒரு சவாலாக இருந்தது என்பது தெரிந்தது. “ரைம்ஸ், நம்பர்ஸ், கலர்ஸ், ஷேப்ஸ்னு எதைக் கற்றுக்கொடுத்தாலும் அவன் ஃபாலோ பண்ண கஷ்டப்பட்டான்” என்றனர் அவனது பெற்றோர். எல்கேஜி, யூகேஜி, முதல் வகுப்புக்குப் பிறகு இரண்டாம் வகுப்பில் படித்தபோதுதான், அஜய்யின் குறைபாட்டைக் கண்டறிந்தனர் அவரது பெற்றோர். ஆனாலும், அதற்கு எவ்வாறு சிகிச்சை பெறுவது என்று அவர்கள் யோசிக்கவேயில்லை.

ஆனால், ஓவியம் வரைவது, வாகனத்தின் உதிரிப்பாகங்களைக் கழற்றி மாட்டுவது என்று வேறு சில செயல்பாடுகளில் கில்லியாக இருந்திருக்கிறான் அஜய். ஆனாலும், பள்ளி ஆசிரியர்கள் அஜய் பற்றிச் சொல்லும் புகார்களால், ஒவ்வொரு முறையும் அவமானத்தை மட்டுமே உணர்ந்திருக்கின்றனர். இதனாலேயே, இவனை மடையன் என்று நினைப்பதா அல்லது வேண்டுமென்றே இவ்வாறு நடந்துகொள்கிறானா என்ற சந்தேகத்தில் காலம் தள்ளியிருக்கின்றனர் அஜய்யின் பெற்றோர். கற்றலில் குறைபாடுதான் அஜய்யின் வாழ்க்கை மாற்றத்துக்குக் காரணமாக இருந்தது.

ஞாபக சக்தி, புரிதல், வாசிப்பு, கணிதம் அறிதல், கோவையாக எழுதுவது மற்றும் சொல்வது உட்பட அனைத்துமே கற்றலோடு தொடர்புடையவைதான். இவற்றைச் செய்யத் திணறினால், அந்தக் குழந்தைகளுக்குக் கற்றல் குறைபாடு இருப்பதை அறியலாம்.

கற்றலில் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

மூளையின் செயல்பாட்டில் உள்ள இந்தக் குறை ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தாய் கருவைச் சுமக்கும்போது அதிகமாகக் கவலைப்படுவது, கருவைக் கலைக்க முயற்சிப்பது, ஊட்டச்சத்து மிக்க உணவுகளைச் சாப்பிடாமலிருப்பது, பிரசவத்தில் குழந்தை கொடிசுற்றிப் பிறப்பது, பிறந்த குழந்தை அழாமல் இருப்பது, குழந்தையின் எடை குறைவாக இருப்பது, வளரும் பருவத்தில் தலையில் அடிபடுவது என்று கற்றலில் குறைபாடு ஏற்படுவதற்கு அடிப்படையாகப் பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக, கற்றல் குறைபாடு என்பது பள்ளிப் பருவத்துடன் முடிவதில்லை. இந்தக் குழந்தைகளுக்குச் சமூகத்தை எதிர்கொள்வதிலும் பல சிக்கல்கள் இருக்கும். புதிய நபர்களுடன் நட்பாவதோ அல்லது பழகிய நட்பைத் தொடர்வதோ இவர்களால் இயலாது. இதனாலேயே, இவர்களுக்குப் பல பிரச்சினைகள் ஏற்படும். கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிடும். பெற்றோர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரும் நிராகரிப்பதால் ஏற்படும் உளவியல் தாக்கத்தினால் இவர்கள் சின்னாபின்னமாகிவிடுவார்கள்.

பல குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் முடங்குவார்கள்; இதற்கு நேரெதிராக, உள்ளக் குமுறல்களை நடத்தைக் கோளாறுகளுடன் வெளிப்படுத்தி, அடாவடித்தனத்துடன் தனது இருப்பை வெளிப்படுத்தும் குழந்தைகளும் உண்டு. பிற்காலத்தில், இவர்கள் மது மற்றும் இதர போதை பழக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்புண்டு. சிறார் குற்றவாளிகளாக மாறும், சிறு வயதிலேயே மனநோய்களுக்கு இரையாகும் அபாயமும் இதன் பின்னுள்ளது. இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல சிக்கல்களுக்கு, கற்றலில் குறைபாடு ஓர் ஆணிவேராக இருக்கும்.

இந்தக் குறைபாட்டின் ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தான் அஜய். அதனால், அவனுக்கான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கினோம். ஆனாலும், உடனடியாக வேறு பள்ளிக்கு மாறிவிட்டான் அஜய்.

(இதன் தொடர்ச்சி நாளை வெளியாகும்)

எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்

கட்டுரையாளர்கள்:

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

ஞாயிறு, 4 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon