மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

ஆஸ்கர் 2018: ஒவ்வொரு நாளும் ஒரு படம்!

ஆஸ்கர் 2018: ஒவ்வொரு நாளும் ஒரு படம்!

Three Billboards Outside Ebbing, Missouri

- சிவா

தன் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டால் நீதி கேட்டு நீதிமன்றங்களையும், காவல் நிலையங்களையும் தேடிச்சென்ற அம்மாக்களில் மில்ட்ரெட் புதுமையானவள். அவர்களைத் தன் வீடு தேடி வரச்செய்ய அவளால் முடிந்தது. ஏனென்றால், அவள் சட்டத்தை அறிந்திருந்தாள். ‘சட்டம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறதா? சட்டத்தைக் குற்றவாளிகள் மட்டும்தான் எதிர்க்க முடியுமா?’ எனக் கேட்கிறது த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசௌரி (Three Billboards Outside Ebbing, Missouri) திரைப்படம்.

மகளை இழந்து வாழும் மில்ட்ரெட் ஹெயஸ், தனது மகளின் இறப்புக்கான நீதியைக் கேட்க இறக்கும்போது என் மகளைக் கற்பழித்தவர்களை இதுவரையில் கைது செய்யவில்லையே என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தும் எப்பிங் கிராமத்தின் தலைமை காவல் அதிகாரி வில்லியம் பில் வில்லௌபியின் பெயரைக் குறிப்பிட்டு மூன்று விளம்பரப் பலகைகளில் விளம்பரம் கொடுக்கிறார். இது செய்திகளில் வெளிவர, மில்ட்ரெட்டைத் தேடி வருகிறார் வில்லௌபி. எங்களால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம் என்றும், உங்கள் மகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரி எந்தக் குற்றவாளியின் டி.என்.ஏவுடனும் ஒத்துப்போகவில்லை என்றும் வில்லௌபி விளக்கும்போது, “நாட்டிலுள்ள அனைவரின் டி.என்.ஏவையும் எடுங்கள்” என அதிரவைக்கிறார் மில்ட்ரெட். வில்லௌபியின் நோய், மக்களிடமிருந்து அவருக்குக் கருணையைப் பெற்றுத் தருகிறது. இது மில்ட்ரெட்டின் மீது கோபமாக மாறுகிறது. ஆனால், வில்லௌபிக்கு மில்ட்ரெட்டின் நிலை நன்றாகவே புரிந்ததால், தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்கிறார்.

போலீஸ் என்றால் உதைக்கப்பிறந்தவன் என நம்பும் ஜேசான் டிக்சன், மில்ட்ரெட்டின் மிரட்டலுக்கு வில்லௌபி பணிந்ததாக நினைக்கிறார். அந்த விளம்பரப் பலகையின் உரிமையாளரை அடிக்கப் பாய்கிறார். வில்லௌபி தடுக்கிறார். வில்லௌபி இருக்கும்வரை இவர்களை எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கும் டிக்சனுக்கான வாய்ப்பு விரைவிலேயே கிடைக்கிறது. புற்றுநோயினால் தான் படும் அவதிகளைத் தாண்டி, மனைவியின் குமுறலை மறைத்து வெளிவரும் சிரிப்பு வில்லௌபியைக் கொல்கிறது. இதை சரிகட்ட குடும்பத்துடன் பிக்னிக் சென்று, அந்த நாளை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிவிட்டு, அன்று இரவே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார். ‘நான் துன்பப்பட்டு இறந்துபோவதைப் பார்த்தால், வாழ்நாள் முழுவதும் உனக்கு அதுதான் நினைவிலிருக்கும். நான் அப்படி இறந்துபோக விரும்பவில்லை. எனவே, தான் நேற்றைய நாளை அற்புதமாக மாற்றினேன். இனி நீ இருக்கும்வரை, அந்த இன்பத்தை நினைத்தே இரு’ என்று அவரது மனைவிக்கு கடிதம் எழுதி இந்தக் கதையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறார் வில்லௌபி. அதுபோலவே மில்ட்ரெட் மற்றும் டிக்சனுக்கு அவர் எழுதிய இரு கடிதங்கள்தான் இந்தக் கதையின் ஹீரோக்கள். மில்ட்ரெட்டிடம் சொல்ல வேண்டியதை டிக்சன் கடிதத்திலும், மில்ட்ரெட்டின் கடிதத்தில் டிக்சனுக்குத் தேவையானதையும் எழுதியிருப்பார். அவை தான் இந்தக் கதையை வேறொரு கோணத்துக்குக்கொண்டு செல்லும்.

தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் வில்லௌபியாக நடித்திருக்கும் வூடி ஹரல்சன் வெளிப்படுத்திய காதல், அன்பு, அலட்சியம் மிக நேர்த்தியானது. வில்லௌபிக்கு ஆதரவாக மில்ட்ரெட்டிடம் பேசச்சென்ற மருத்துவரில் விரலில், துளையிட்டதை விசாரிக்கும் காட்சி ஒன்று மட்டுமே மில்ட்ரெட்டாக நடித்திருக்கும் பிரான்செஸ் மெக்டார்மண்டின் நடிப்புக்குச் சான்றாய்க் காட்டிவிடமுடியும். விசாரணையின்போதே புற்றுநோயின் தீவிரத்தால் இருமல் வந்து, ஹரல்சனின் வாயிலிருந்து தெறிக்கும் ரத்தம் மெக்டார்மண்டின் முகத்தில் விழும். அதைப் பொருட்படுத்தாமல் வூடி ஹரல்சனுக்காக ஆம்புலன்ஸ் கேட்டுக் கதறும் காட்சி த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசௌரி படத்தின் முத்தாய்ப்பான ஒன்று.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் எப்போதுமே விசித்திரமாகவே அணுகப்படுகின்றன. பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் ஆதரவைப் பொறுத்தே அவற்றின் தீவிரத்தன்மை அளவிடப்படுகிறது. டெல்லியில் பாதிக்கப்பட்ட நிர்பயாவுக்கும், அரியலூரில் கொல்லப்பட்ட நந்தினிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவருமே பெண்கள்தான். ஆனால், அவர்களது வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் கிடைத்த தண்டனைகளில் எவ்வளவு வித்தியாசம். அது அவர்களுக்குக் கிடைத்த நீதியில் இல்லை. சட்டங்கள் கையாளப்பட்ட முறையில்தான் இருக்கிறது. தன்னைப் பாலியல் வன்புணர்வு செய்தது யாரென்றே தெரியாத சூழல் ஏற்படும்போது, பொருளாதார நிலை - சமூகத்தின் ஒத்துழைப்பு - அரசியல் பலம் என பலவற்றாலும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள். ஒரு பாலியல் வழக்கில் ‘நான்தான் குற்றவாளி’ என ஒருவர் சரணடையும்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேற்கூறிய காரணிகளின் பலம் இல்லாதபோது, குற்றவாளியென முன்வந்தவருக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால், அவர்தான் அந்தக் குற்றத்தைச் செய்தாரா என எவ்வித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடும் வக்கீல் சரியான காரணங்களைச் சொல்லி நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வைக்கும்போது மட்டுமே அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் நடைபெற்ற தாக்குதலில் மகன் பலியாகி, மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவர்களின் தாய் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். பல நாள்கள் கடந்த பிறகே கோமாவில் இருக்கும் தாய், மகளுக்குப் பரிசோதனைகள் நடத்த நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஒரு வாரம் கழிந்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. டெல்லியில் நிர்பயாவுக்கு பதறிய அரசாங்கம், நுங்கம்பாக்கத்தில் சுவாதிக்கு அலறிய சைரன்கள் விழுப்புரத்தில் மட்டும் ஏனோ நகர்ந்துகொண்டிருக்கின்றன.

த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசௌரி படத்தில் அனைத்து மக்களின் டி.என்.ஏக்களையும் எடுக்கச் சொல்வது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும், இந்தக் குற்றங்களுக்கெல்லாம் இன்னும் எத்தனை நாள்கள் தேசத்தின் நான்கு தூண்களும் நாற்காலியில் அமர்ந்தே தீர்ப்பளிக்கப் போகின்றன. உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு மிருகமும் இன்னொன்றுக்கு உணவாக வேண்டுமென இயற்கை விதித்திருக்கிறது. ஆனால், மனிதன் என்பவன் ஒருவன் தானே. மனிதன் எனும்போது ஆண் பெண் என இரு பால்களும் ஒன்றிணையவில்லையா? பிறகெப்படி ஓர் ஆண், ஒரு பெண்ணை வேட்டையாடுகிறான். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தச் சமூகம் இதை கவனிக்காமலேயே இருக்கப்போகிறது? மரணம் குற்றத்தைத் தடுக்குமென்றால், போரில் கொத்து கொத்தாக இறக்கும் உயிர்களைப் பார்த்தபின், கதைகளில் சொல்லப்படும் சொர்க்கமாக இந்த பூமி மாறியிருக்க வேண்டாமா? சுடுகாடாகவே இருக்கிறதே? இப்படி பல கேள்விகளை த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசௌரி எழுப்புகிறது.

வெள்ளி, 2 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon