மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

காங்கிரஸ் விழாவில் தமிழிசை?

காங்கிரஸ் விழாவில் தமிழிசை?

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினருமான குமரி அனந்தனின் 86ஆவது பிறந்தநாள் மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதற்கான விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “இலக்கியச் செல்வர் டாக்டர் குமரி அனந்தன் அவர்களின் 86ஆவது பிறந்தநாளைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக விழாக்குழு அமைத்துக் கோலாகலமாகக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கங்கை - குமரி இணைப்பு, உலகப் பொது மொழி வேண்டும், கோயில்களில் தமிழ் வழிபாடு, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் அனைத்து மதத்தினரும் ஜாதியினரும் பேதமில்லாமல் வழிபடத் தியாகி சுப்பிரமணிய சிவா கனவு கண்ட சமத்துவப் பொது பாரதமாதா ஆலயம் வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 16 முறை 2548 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு வரலாறு காணாத சாதனை படைத்தவர்” என்று குமரி ஆனந்தன் குறித்து பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார்.

குமரி அனந்தனால் வளர்க்கப்பட்டவர்கள் பிற்காலத்தில் அரசியல் தலைவர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், “குமரி அனந்தனின் பிறந்தநாள் விழா வருகிற 22ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவரும் குமரி அனந்தனின் மகளுமான தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. தமிழக பாஜக தலைவராக அவர் அந்த விழாவில் கலந்துகொள்வாரா அல்லது குமரி அனந்தனின் மகளாகக் கலந்துகொள்வாரா என்று அரசியல் வட்டாரத்தில் சுவாரசியமாகப் பேசப்படுகிறது. மேலும், காங்கிரஸ் விழாவில் தமிழிசை கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 2 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon