மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்-6

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்-6

இராமானுஜம்

எல்லாம் எனக்குச் சொந்தமானதுதான், பட்டா என் பெயரில்தான் இருக்கிறது. ஆனால், இதனை எப்படிப் பயன்படுத்துவது, எப்போது பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்க முடியாத சூழ்நிலைக் கைதியாக, சுயமரியாதை இழந்தவர்களாகவே தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு எனச் சங்கம் இருக்கிறது இந்த நிலை மாற ஏன் சங்கம் முயற்சி எடுக்கவில்லை என்கிறபோது, இப்படி ஒரு நிலை தொடரச் சங்க நிர்வாகிகளும், தியேட்டர் உரிமையாளர்களில் பிரபலமானவர்களும்தான் காரணம் என்கிறது தியேட்டர் வட்டாரம்.

அந்த கறுப்பு ஆடுகள் யார்?

தமிழ் சினிமா தயாரிப்புத் துறை சார்ந்து 24 சங்கங்கள் இயங்கிவருகின்றன. தொழிலாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அங்கம் வகிக்கும் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்குத் தொழில் ரீதியாகப் பிரச்சினை ஏற்பட்டால் அவர் சார்ந்த அமைப்பு நிர்வாகிகள் உடனடியாகத் தலையிட்டு முடிவு காண்பார்கள்.

தமிழ் சினிமா தயாரிப்புத் துறையில் செய்யப்படும் முதலீட்டில் 60 % தியேட்டர்களில் திரையிடப்படுவதன் மூலம் கிடைக்கும் வசூல் மூலம் ஈடுசெய்யயப்படும். தியேட்டர்களே நடிகர்களின் செல்வாக்கை உறுதிப்படுத்தும் இடம்.

இவர்களுக்கு என்று ஒன்றுபட்ட அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக இல்லை. D. ராமானுஜம் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படம் வெளியிடுவோர் சங்கம் அவரது மறைவுக்குப் பின் செயல்படவில்லை.

இந்த அமைப்பின் பொறுப்புக்கு வந்தவர்கள் நேர்மையானவர்களாக, ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இல்லை என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

இதனால் தியேட்டர்களைக் குத்தகைக்கு எடுத்து நடத்துபவர்கள் குறுநில மன்னர்களாக உருவெடுத்தார்கள். இவர்கள் மாநில அளவில் சங்கம் எடுக்கும் முடிவுகளை மாற்றக்கூடியவர்களாக இருந்தார்கள். அப்படி முடியாத பட்சத்தில் அந்த முடிவுகளைச் சீர்குலைத்துத் தோல்வி அடையச்செய்தார்கள்.

டிஜிட்டல் நிறுவனங்கள் 2007இல் சினிமா தியேட்டர்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியபோது திரைப்பட விநியோக மாவட்டங்களில் தீர்மானிக்கும் சக்தி மிக்க குறுநில மன்னர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அவர்கள் நடத்துகின்ற திரையரங்குகளுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டன.

டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்ககள் ஒன்று சேருகிறபோது அதனை முனை மழுங்கிப் போகச்செய்கிற வேலைகளை இந்தக் குறுநில மன்னர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செய்துவந்தனர்.

நேற்று முதல் தமிழகத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ள முடிவை நமுத்துப்போகச்செய்யும் வேலையைச் சென்னை நகரம், வட மாவட்டம், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மும்மூர்த்திகள் தொடங்கியுள்ளனர். இவர்களில் பிரதானமானவர் 68 திரையரங்குகுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுப்ரமணி.

165 ரூபாயுடன் திரைப்படத் தொழிலுக்கு வந்ததாகவும் இன்று பல திரையரங்குகளைக் கொங்கு மண்டலத்தில் சொந்தமாகக் கட்டி நடத்திவருவதாகவும் சினிமா விழாக்களில் பெருமையாகக் கூறும் வெள்ளந்தி மனிதன் திருப்பூர் சுப்பிரமணி கறுப்பு ஆடா, அல்லது தன் தொழில் சார்ந்த சமரசவாதியா?

(இதற்கான விடை, திங்கட் கிழமை…)

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

வெள்ளி, 2 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon