மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

தப்பிய பார்சிலோனா!

தப்பிய பார்சிலோனா!

லா லீகா தொடரில் இன்று (மார்ச் 2) பார்சிலோனா, லாஸ் பால்மஸ் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

லா லீகா தொடரின் 2017-18ஆம் ஆண்டிற்கான சீசன் தொடங்கியது முதல் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் பார்சிலோனா அணி விளையாடிவருகிறது. இன்று நடைபெற்ற இந்தப் போட்டியிலும் பார்சிலோனா அணி வெற்றியைப் பெற்று அந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ளும் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் ஆவலுடன் போட்டியைக் காணக் குவிந்தனர்.

இன்று போட்டி தொடங்கிய முதல் சில நிமிடங்களுக்குள்ளாகவே மெஸ்ஸி அதனை கோல் போஸ்ட்வரை அசிஸ்ட் செய்து, லூயிஸ் ஸ்ரேஸிடம் பாஸ் செய்தார். ஆனால் அதனை அவர் கோலாக மாற்றத் தவறினார். அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி அடித்த ப்ரீ கிக்கையும் எதிரணி கோல் கீப்பர் சிறப்பாகத் தடுத்து பார்சிலோனா அணி முன்னிலை பெறுவதைத் தடுத்தார். ஆனால் மீண்டும் மெஸ்ஸிக்கு மற்றொரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதனை இந்த முறை மிகவும் துல்லியமாக அடித்து கோலாக மாற்றி அணியை முன்னிலை பெறச்செய்தார்.

அதன் தொடர்ச்சியாக இரு அணிகளும் முதல் பாதியில் வேறு கோல் அடிக்கவில்லை என்பதால், பார்சிலோனா அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் இரண்டாம் பாதி தொடங்கியதும் லாஸ் பால்மஸ் அணி வீரர்கள் புதிய உத்வேகத்துடன் விளையாடி கோல் அடிக்க நெருங்கினர். அதனை பார்சிலோனா வீரர்கள் தடுக்க அது கார்னர் கிக்காக மாறியது. கார்னர் கிக் முறையில் லாஸ் பால்மஸ் அணி வீரர் கோல் அடிக்க முயற்சி செய்தபோது பந்து கோல் போஸ்டில் பட்டுத் திரும்பி வந்து பார்சிலோனா அணி வீரர் கைகளில் பட்டது. எனவே லாஸ் பால்மஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை ஜோனதன் கோலாக மாற்றினார். எனவே போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனானது.

பின்னர் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாமல் போனதால் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாம் பாதியில் லாஸ் பால்மஸ் அணி வீரர்கள் அடிக்க முயற்சி செய்த வாய்ப்புகள் தோல்வியடைந்ததால் பார்சிலோனா அணி தப்பியது. லாஸ் பால்மஸ் அணி வெற்றி பெற்றிருந்தால், பார்சிலோனா அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.

இதுவரை இந்த சீசனில் பார்சிலோனா அணி 26 போட்டிகளில் விளையாடி, 20 வெற்றிகள் 6 சமனுடன் 66 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. அடுத்த லீக் ஆட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள அட்லான்டிகோ மாட்ரிட் அணியுடன் பார்சிலோனா அணி விளையாட உள்ளது.

வெள்ளி, 2 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon