மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 6

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 6

இராமானுஜம்

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் வசம் பாதுகாப்பாக இருந்த ‘கண்டென்ட்’ டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் போனது தயாரிப்பாளர்களுக்கு பின்னடைவு.

2007ஆம் ஆண்டு தமிழகத்தில் கியூப் நிறுவனம் தனது நிறுவனத்தைத் தொடங்கியது. மாநிலத்தில் செயல்பட்டுவரும் 1100 திரைகளில் 800க்கும் அதிகமான திரைகள், மற்றும் 100க்கும் மேற்பட்ட கல்லுரி, பொழுதுபோக்கு கிளப்புகள், தனியார்வீடுகளில் கியூப் தொழில்நுட்பத்தில் படங்கள் திரையிடும் வசதி இருக்கிறது.

பிரிண்ட் முறையில் படங்கள் திரையிடப்பட்டு வந்தபோது படப்பிரதி முதலீடு செய்தவர்களிடம் இருந்தது. படத்தின் நெகட்டிவ் அப்படம் தொடங்கியதிலிருந்து ரீலீஸ் வரை அப்படத்தின் பணிகளில் பங்குகொண்ட லேபரெட்டரிகளில்தயாரிப்பாளரின் செலவில் பாதுகாக்கப்பட்டுவந்தது.

டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வந்த பின் ஓரிடத்தில் பாதுகாப்பாக இருந்த மூலப்பிரதி 12 டிஜிட்டல் ஆபரேட்டர்களிடம் பரவிக் கிடக்கிறது. காரணம், ஒரு முறை கியூப் நிறுவனத்திடம் ரூபாய் 23000க்குக் குறிப்பிட்ட படத்தைத் திரையிடஆயுட்கால லைசென்ஸ் வாங்கிவிட்டால் இந்தியா முழுவதும் எந்தத் திரையரங்கிலும் படத்தை இலவசமாகத் திரையிடும் வசதியை வழங்குகின்றன டிஜிட்டல் நிறுவனங்கள்.

முதல் வாரம் குறிப்பிட்ட படத்தைத் திரையிட 13000 ரூபாய் செலுத்தி லைசென்ஸ் வாங்கிவிட்டால் அடுத்தடுத்த வாரங்களில் அதே படத்தை வேறு திரையரங்குகளில் திரையிட 50% வீதம் குறைக்கப்படுகிறது.

இதுபோன்ற சலுகைகளால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ள தியேட்டர்ககளில் மட்டுமே படங்களைத் திரையிடத் தொடங்கினார்கள். பிரிண்ட் முறையைத் தொடரும் தியேட்டர்களுக்குப் புதிய படங்கள்வேண்டுமென்றால் அவர்கள் சொந்த செலவில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறத் தொடங்கினர். இதனால் இன்றைக்கு பிரிண்ட் முறையில் திரையிடும் திரையரங்குகள் தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ள தியேட்டர்களில் படங்களை டிஜிட்டல் முறையில் திரையிடும் புரொஜக்டர் உரிமையாளருக்குச் சொந்தமானதில்லை.

பிலிம் ரோலில் படங்கள் திரையிட்டபோது ஒரு படம் வசூல் இல்லை என்றால் உடனடியாகப் படத்தை மாற்றிவிடும் வசதி இருந்தது. டிஜிட்டல் முறையில் ஒரு வாரம் முடிந்த பின்னரே படங்களை மாறுதல் செய்ய முடியும் என்பதால்தேவையற்ற வசூல் இழப்பை தியேட்டடர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

2007இல் கியூப் தன் சேவையைத் தொடங்கியபோது சர்வீஸ், தகவல் தொடர்புகளில் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தது. தியேட்டர்கள் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் தாங்கள் வைத்ததே சட்டம் என்கிற ஆதிக்க மனப்பான்மையுடன்கியூப் நிர்வாகம் தியேட்டர் உரிமையாளர்களை நடத்தத் தொடங்கிவிட்டது.

பல்பும், புரொஜக்டரும் இலவசம் என்பதால் அந்த முதலீட்டை எடுக்கப் படம் தொடங்குவதற்கு முன் ஏராளமான விளம்பரப் படங்களை டிஜிட்டல் மூலம் திரையிடுவதைத் தடுக்க முடியவில்லை. அதன் மூலம் எவ்வளவு வருமானம்என்பதையும் கேட்க முடியவில்லை. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலை இன்று வரை தொடர்கிறது.

எல்லாம் எனக்குச் சொந்தமானதுதான். பட்டா என் பெயரில்தான் இருக்கிறது. ஆனால், இதனை எப்படிப் பயன்படுத்துவது, எப்போது பயன்படுத்துவது என்பதை நான் தீர்மானிக்க முடியாது என்னும் நிலையில், சூழ்நிலைக் கைதியாக,சுயமரியாதை இழந்தவர்களாகவே தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு எனச் சங்கம் இருக்கிறது. இந்த நிலை மாற ஏன் சங்கம் முயற்சி எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினால், இப்படி ஒரு நிலை தொடரச் சங்க நிர்வாகிகளும், தியேட்டர் உரிமையாளர்களில் பிரபலமானவர்களும்தான் காரணம்என்கிறது தியேட்டர் வட்டாரம்....... (அந்தக் கறுப்பு ஆடுகள் யார்? நாளை...)

பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4பகுதி 5

வியாழன், 1 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon