மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 13

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 13

கேபிள் சங்கர்

நண்பர் நாடக நடிகர். சிறு வயது முதலே சினிமாவில் ஆர்வம். கருமை நிறம். தீர்க்கமான கண்கள் கொண்டவர். ஒவ்வொரு முறை சினிமாவில் இறங்கலாம் எனும்போது ஏதாவது குடும்ப பிரச்னை வந்து முன் நிற்கும். இருக்கும் வேலையை விட்டுவிட்டுப் போக முடியாத சூழ்நிலை வந்துவிடும். மீண்டும் பழைய கனவுக் குகைக்கே போய்விடுவார். இப்படி அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல் வருடங்கள் பல கடந்தாலும், சினிமாவை ஒருகை பார்க்க ஆசை மட்டும் விடவில்லை. பிள்ளைகளுக்கு எல்லாம் கல்யாணம் செய்து கொடுத்த அடுத்த நாள் தான் பார்த்துக்கொண்டிருந்த அரசு வேலையை விட்டார். நேரே சென்னைக்கு ரயிலேறினார். நண்பர் ஒருவரின் அறையில் வந்து தங்கி வாய்ப்பு தேட ஆரம்பித்தபோது அவருக்கு வயது 55.

வந்த நேரம் நல்ல நேரம் போல. சென்று பார்த்த ஒன்றிரண்டு இயக்குநர்கள் உடனடியாக அவருக்கு வாய்ப்பு கொடுக்க, முதல் அறிமுகம் டிவி சீரியலில். மனிதருக்கு சந்தோஷம். ஆஹா... இத்தனை நாளாக நாம்தாம் வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறோம் என்று வருந்தினார். அவர் நடித்த சீரியலைப் பார்த்துவிட்டு, அப்போது பிரபலமாக இருந்த இன்னொரு சீரியலின் இயக்குநர் அழைத்து, மிகப் பெரிய கேரக்டருக்கு அவரைத் தெரிவு செய்தார். மட்டற்ற மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ரெண்டு மூன்று வருடங்கள் அந்த சீரியலில் கிடைத்த கேரக்டரிலேயே வாழ்ந்து காட்டினார். சீரியல் பெரும் ஹிட். ஊருக்குப் போனால் தன் பின்னால் ஒரு பெரும் ரசிகர் படையே வருவதாகச் சொல்லிச் சிரிக்கும்போது அவர் முகத்தில் தெரியும் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

ஆனால், அந்த சிரீயல் முடிந்ததும்தான் பிரச்னையே ஆரம்பித்தது. ஹிட் கொடுத்த சீரியலில் அவர் ஊர்க் கோயில் பூசாரி. அந்தக் கேரக்டர் கதைக்கு மிக முக்கியம். அவர்தான் கதையில் பெரிய திருப்பத்தையே கொண்டுவந்தவர். சினிமாவில் ஒரு பழக்கம் இருக்கிறது. ஒருவர் ஏதேனும் ஒரு வேடத்தில் நடித்து ரிஜிஸ்டர் ஆகிவிட்டால் அவரைக் கடைசி வரை அந்த கேரக்டரையே கொடுத்துச் சாகடிப்பார்கள். ஒரே ஆள் போலீஸ் வேடத்திலேயே எத்தனை முறை, எஸ்.பி சவுத்ரியாக, அலெக்ஸ் பாண்டியனாக நடித்துக்கொண்டேயிருக்க முடியும்? அவருக்கும் அதே கதிதான். எங்கு போனாலும் ஒரு பத்து நிமிடம் அவரின் நடிப்பைப் பற்றி சிலாகித்துவிட்டு, ‘நம்ம கதை சிட்டி பேஸ்ட். இதுல உங்களுக்கு ஏதும் செட் ஆகாது. அதனால் நம்ம நண்பர் ஒரு வில்லேஜ் ஸ்டோரி பண்றாரு.. அவராண்ட சொல்லிவிடறேன்’ என்று அனுப்பிவிடுவார்கள்.

‘இல்லைங்க... நான் சிட்டி கேரக்டர்கூடப் பண்ணுவேன். அப்பா, தாத்தா, எல்லாம் எனக்கு சூட் ஆகும்’ என்று அவர் திரும்பத் திரும்ப சொன்னாலும் ‘சார்... நம்ம கதை யூத் கதை. அப்பாவுக்கு நரேன், ஜெயபிரகாஷ் மாதிரியான ரிச் லுக் ஆளுங்கதான் தேவை. அதனால.. நிச்சயம் அடுத்த படத்துல பார்த்துருவோம்’ என்றே பதில் வரும். நண்பர் இனி பூசாரி கேரக்டரில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார். வருமானத்தில் வெட்டு விழ ஆரம்பித்தது. இவர் போனால் என்ன இன்னொரு கறுத்த பூசாரிக்கா பஞ்சம்? இவரைப் பார்த்து இவரே நடிக்கிறாரே என்று அவர் ஊரிலிருந்தே ரெண்டு பேர் கிளம்பி வந்து வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்கள். வேறு வழியேயில்லாம் மீண்டும் கோயில் பூசாரி, பஞ்சாயத்து தலைவர் என்றே நாள்களை ஓட்டிக்கொண்டிருந்தார்.

“எத்தனை நாடகம், எத்தனை கேரக்டர். நான் சொந்தக் குரல்ல பாடுவேன் சார். ஆனா பாருங்க... பயன்படுத்த மாட்டேங்குறாங்க. நேத்து ஷூட்டிங்ல தமிழே தெரியாத மலையாள நடிகனோட ரெண்டே வரி டயலாக்குக்கு எட்டு டேக். அதுவும் வேறு வழியே இல்லாமல் ஓகே பண்ணாரு. டைரக்டர். கேட்டா பிரபலமானவராம். கிராமத்துல வில்லத்தனம் பண்ணுற பஞ்சாயத்து பெரியவர் கேரக்டர். அதுக்கு நான்தானே சரியா இருப்பேன். மலையாளத்தான் எப்படி செட் ஆவான். அவனுக்கு க்ரே அடிச்சி வயசாக்கி.. என்ன நடக்குது இந்த சினிமால..?” என்று சரக்கடித்தபடி புலம்புவார். நான் ஏதும் பேசாமல் பார்த்துக்கொண்டேயிருப்பேன்.

நாள்கள் செல்லச் செல்ல அவரால் பெரியதாக ஏதும் சாதிக்க முடியவில்லை. வயதும் ஏற ஏற, உடல் நிலை வேறு. தனி சமையல், தனிமை எல்லாம் வாட்ட ஆரம்பித்து, ஒரு நாள் என்னை அழைத்தார். “தம்பி நான் ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன். அட்வான்ஸ் திரும்ப வாங்கிட்டேன். நாளைக்கு ராத்திரி ட்ரெயின்” என்றார். கண்கள் எல்லாம் கலங்கியிருந்தது.

“அண்ணே.. நீங்க வந்து ஏதும் சாதிக்காம போறீங்கன்னு வருத்தப்படாதீங்க. இன்னும் பத்து வருஷத்துக்கு பூசாரின்னா உங்க முகம் ஞாபகம் வருமே தவிர வேற யாரையும் தோணாத அளவுக்கு நடிச்சு பேர் வாங்கித்தான் இருக்கீங்க...” என்று அணைத்துக்கொண்டேன்.

“ஹா... ஹா...” என்று சிரித்தார். அடுத்த நாள் ரயில் நிலையத்தில் அவரை வழி அனுப்புவதற்காகக் காத்திருந்தேன். ரயில் வந்ததும், சின்னக் குழந்தைப் போல அழுதார். “அழுகாதீங்கண்ணே... நான் ஊருக்கு வந்து பார்க்குறேன். நான் படம் ஆரம்பிக்கும்போது நீங்கதான் தாத்தா” என்றேன். சிரித்தபடி கண்களைத் துடைத்துக்கொண்டார். போன் அடித்தது. அவரை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய இயக்குநர். எதிர் முனையில் அவர் பேச பேச கண்களிலிருந்து தாரைதாரையாய் கண்ணீர். போனை கட் செய்துவிட்டுப் பரிதாபமாக என்னைப் பார்த்தார்.

“என்னண்ணே?”

“டைரக்டர்தான் கூப்பிட்டார். அடுத்ததாகப் படம் ஆரம்பிக்கிறாராம் உடனே ஆபீஸ் வரச் சொல்லுறாரு. இப்ப நான் என்ன செய்ய?”

“அண்ணே.. தயவுசெய்து நீங்க ட்ரெயின்ல ஏறுங்க. எனக்கு தெரிஞ்சு அவர் படம் ஆரம்பிக்கிறது கஷ்டம். ஏன்னா அவரோட போன படம் பெரிய பெயிலியர். கொஞ்ச நாள் ஆகும். நிஜமாவே அவருக்கு நீங்க தேவைன்னா நிச்சயம் மறுபடியும் கூப்பிடுவாரு. அப்ப வேணா திரும்ப வாங்க. இப்ப கிளம்பினதை நிறுத்தாதீங்க” என்றேன். அழுதுகொண்டே ரயிலேறினார்.

இன்று வரை அந்த இயக்குநர் படம் ஆரம்பிக்கவேயில்லை. அண்ணன், பேரக் குழந்தைகளுடன் கொண்டாட்டமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 28 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon