மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

பொருளாதார வளர்ச்சியில் பீகார் முன்னிலை!

பொருளாதார வளர்ச்சியில் பீகார் முன்னிலை!

பீகார் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 2016-17ஆம் நிதியாண்டில் 10.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

பீகார் மாநிலத்தின் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான பிப்ரவரி 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. கூட்டத் தொடரின் முடிவில் அம்மாநிலத் துணை முதல்வரும் நிதியமைச்சருமான சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடையே பேசுகையில், ”2016-17ஆம் நிதியாண்டில் பீகார் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 10.3 சதவிகிதமாகும். நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியான 7.0 சதவிகிதத்தை விட இது அதிகமாகும். 2012-13ஆம் நிதியாண்டின் வருவாய் உபரி ரூ.5,101 கோடியாகும். இது 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.10,819 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், நடப்பு 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.14,556 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரையில், 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.4,418 கோடியாக உள்ளது. இது 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.883 கோடியாக இருந்தது. 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.18,112 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடன்களைப் பொறுத்தவரையில், 2016-17ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் கடன் ரூ.21,577 கோடியாகும். வேளாண் துறையின் வளர்ச்சி 2016-17ஆம் நிதியாண்டில் 6.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்நிதியாண்டில் பருப்பு உற்பத்தி 180.99 லட்சம் டன்னாகவும், அரிசி உற்பத்தி 82.39 லட்சம் டன்னாகவும், கோதுமை உற்பத்தி 59.86 லட்சம் டன்னாகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.

செவ்வாய், 27 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon