மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 பிப் 2018

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்!

இராமானுஜம்

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் தொடக்க காலத்தில் லாப நோக்கத்துடனோ, வியாபார நோக்கத்துடனோ கட்டப்படவில்லை.

ஜமீன்தார்கள், பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் தங்கள் பெயரில், தங்கள் சுய கௌரவத்திற்காகவும், சிலர் சேவை மனப்பான்மையுடன் தங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத இடங்களில் தியேட்டர்களை கட்டினார்கள். இதனால் இடத்துக்கான முதலீடு கிடையாது. கட்டிடம், புரொஜக்டர், பிற அலங்கார அமைப்புகளுக்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டி இருந்தது.

தங்களது பொழுதுபோக்குக்காக நகர்புறங்கள், தொலைதூர நகரம் சென்ற ஜமீன்களும், பண்ணையார்களும் மாலை நேரங்களில் தியேட்டர்களில் கூட தொடங்கினர். வியாபார ரீதியாக தியேட்டர் கட்டியவர்கள் மட்டுமே முதலீடு - லாப கணக்கு பார்த்து தொழில் செய்தனர்.

கெளரவத்துக்காக தியேட்டர் கட்டியவர்கள் லாப நஷ்டம் பார்க்கவில்லை என்றாலும் கடந்த ஐம்பது ஆண்டு கால சினிமா தொழில் லாபகரமான தொழிலாகவே இருந்து வந்துள்ளது. தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் - தியேட்டர் உரிமையாளர்கள் இடையே நம்பக தன்மையும், நாணயமும் அபரிமிதமாக இருந்ததால் முத்தரப்புக்கும் நஷ்டம் ஏற்படுத்தாத தொழிலாக சினிமா இருந்தது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவில் முழுக்க ஆதிக்கம் செலுத்த தொடங்கிய போது சினிமா லாப நோக்குடன் கூடிய தொழிலாக மாறியது. சினிமா தயாரிப்பு, அதற்காக ஸ்டுடியோக்களை நிர்மாணித்தல், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் ஸ்டுடியோ ஆகியவற்றில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டன.

வரையறுக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாக இல்லாமல் இயங்கி வந்த சினிமா தொழில் காலமாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, வியாபார வளர்ச்சி ஏற்பட்ட போது தங்களுக்குள் தொழிலாளர் அமைப்புகள், விநியோகஸ்தர்கள் அமைப்புகள், தயாரிப்பாளர்கள் அமைப்புகள் என தனி தனி சங்கங்கள் உருவாகின. இவ்வமைப்புகள் தயாரிப்புத் துறை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்களிப்பை செய்தனர்.

தியேட்டர் தொழிலை கெளரவத்திற்காக, தங்கள் ஊர் பெருமைக்காக நடத்தி வந்தவர்களின் வாரிசுகள் நிர்வாக பொறுப்புக்கு வந்த போது தியேட்டர்கள் நவீனப்படுத்தபட்டன; குளிர் சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்காக பெரும் பணம் முதலீடு தேவைப்பட்டது. இதனை சிலர் சொந்தமாகவும், பலர் வங்கி கடன் மூலமாகவும் சமாளித்தனர். போட்ட முதலீட்டை குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வருமாைனத்தை அதிகரிக்க வெற்றி பெறக்கூடிய படங்களை திரையிடுவதில் தியேட்டர்களுக்கிடையில் போட்டி ஏற்பட்டது. இதனை விநியோகஸ்தர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கினர். ஒரு தியேட்டரில் புதிய படங்களை திரையிட அட்வான்ஸ், மினிமம் கேரன்டி விலை, ஹையர் என மூன்று நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

அட்வான்ஸ் முறை : படம் ஓடி முடிகிறபோது வசூலான தொகை கூடுதலாக இருந்தால் விநியோகஸ்தருக்கு தியேட்டர் உரிமையாளர் கூடுதல் தொகையை கொடுக்க வேண்டும். குறைவாக இருந்தால் விநியோகஸ்தர் எஞ்சிய தொகையை திருப்பித் தர வேண்டும்.

மினிமம் கேரண்டி : தியேட்டரில் திரையிட நிர்ணயிக்கப்படும் 10 லட்ச ரூபாய்க்கு (உதாரணத்திற்கு ) படம் வசூலாகி கூடுதல் தொகை வந்தால் விநியோகஸ்தருக்கு பங்கு கொடுக்க வேண்டும். 7 லட்ச ரூபாய் மட்டுமே வசூல் ஆகியுள்ளது என்றால் 3 லட்சம் நஷ்டம் தியேட்டடர் உரிமையாளரைச் சார்ந்தது.

ஹையர் : படத்தை திரையிட 10 லட்சம் ஹையர் என விலை நிர்ணயம் செய்யப்பட்ட தியேட்டரில் 15 லட்சம் வசூல் ஆனாலும் விநியோகஸ்தருக்கு பங்கு கொடுக்க வேண்டியதில்லை. இந்த நடைமுறை 1990க்கு பின் பெரும் மாற்றத்திற்கு உள்ளானது.

வியாபார முக்கியத்துவம் உள்ள நடிகர்களின் படங்கள் அவுட் ரேட் முறையில் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வியாபாரம் செய்யப்பட்டது. கொடுத்த விலையை தியேட்டர்களில் அட்வான்ஸ், மினிமம் கேரன்டி முறையில் விநியோகஸ்தர்கள் ஒன்று திரட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. படங்கள் வெற்றி பெறுகிற போது முதலீடு முடக்கம், இழப்பு என்பது தியேட்டர்களுக்கு இல்லை. படம் தோல்வி அடைகிற போது தியேட்டர் உ ரிமையாளர்களுக்கு முதலீடு முடக்கம், இழப்பு தொடர்கதை ஆனது.

தியேட்டர் நடத்துவது ஆடம்பரமான செலவாக மாறியதால் நகர்புறங்களில் இருந்த திரையரங்குகள் வணிக வளாகங்களாக, திருமண மண்டபங்களாக மாறியது. கேளிக்கை வரி, தியேட்டர் பராமரிப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் குறைய தொடங்கி வசூல் வீழ்ச்சியடைந்ததால் திரையரங்குகளை நடத்துவது சுமையாக மாறியது.

இந்த சூழலில் திரையரங்கு தொழிலில் கார்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்ய தொடங்கியிருந்தன. சினிமா தயாரிப்பு, திரையிடல் இரண்டிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. ஹாலிவுட் ஆங்கில படங்கள் குக்கிராமம் வரை திரையிடும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. நவீன மாற்றங்களுக்கு மாறாத தியேட்டர்கள் தங்களை புனரமைத்துக் கொண்டால் மட்டுமே தொழிலில் நீடித்திருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. லட்சக்கணக்கில் முதலீடு செய்ய தயங்கினர். அவ்வாறு முதலீடு செய்தாலும் அதனை திரும்ப எடுக்க இன்றைய சினிமாவில் முடியுமா என்று தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கத்தில் தடுமாறிய போது எல்லாமே இலவசம் என்ற கோஷத்துடன் வந்தார்கள் டிஜிட்டல் நிறுவன பிரதிநிதிகள். இதற்கு உடந்தையாக இருந்து உரம் போட்டு வளர்த்தவர்கள் வேறு யாருமல்ல. இந்நிறுவனங்களுக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கும் தயாரிப்பாளர்களே.

நாளை...... இலவசமாக நவீன வசதிகளை பெற்ற தியேட்டர் உரிமையாளர்கள் விட்டுக் கொடுத்தது என்ன?

பகுதி 1

பகுதி 2

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

செவ்வாய் 27 பிப் 2018