மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

சின்னசாமி நீக்கம்: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.ஸுக்கு நோட்டீஸ்!

சின்னசாமி நீக்கம்: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.ஸுக்கு நோட்டீஸ்!

அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பிலிருந்து சின்னசாமி நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 2ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்குப் பிறகு ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியிலிருந்து ஆர்.சின்னசாமி நீக்கப்படுவதாகவும், அந்தப் பொறுப்பிற்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை பேரவை பணிகளைக் கவனிக்க யு.ஆர்.கிருஷ்ணன், தாடி. ம.இராசு, க.சங்கரதாஸ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த சின்னசாமி, "எதற்காக என்னை நீக்கினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து என்னிடம் எந்தக் விளக்கமும் கேட்கவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று கூறாமலேயே என்னை நீக்கியுள்ளனர்.ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் துரோகம் செய்துவிட்டனர். இதுகுறித்து முதல்வர், துணை முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்" என்று கூறியிருந்தார்.

மேலும் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கும் தொடர்ந்தார். தன்னை தொழிற்சங்கச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது சட்டவிரோதம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இன்று (பிப்ரவரி 26) விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

திங்கள், 26 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon